Tirunelveli (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 06, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பகுதியில் உள்ள கிராமத்தில் 17 வயதுடைய சிறுவன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு பயில்கிறார். இதே ஊரில் வசித்து வந்த 17 வயதுடைய மாணவி ஒருவரும் மாணவருடன் பயின்று வந்துள்ளார். இருவருக்கும் நட்பு ரீதியான பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பு முடிந்து வீட்டுக்குச் செல்லும் இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

அக்காவிடம் பேசியதால் ஆத்திரம் :

இந்த விஷயம் இதே பள்ளியில் படித்து வரும் மாணவியின் 15 வயது தம்பிக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த சிறுவன் தனது அக்காவுடன் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என 12ஆம் வகுப்பு மாணவரை அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத 12ஆம் வகுப்பு மாணவர் தொடர்ந்து மாணவியுடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற மாணவியின் தம்பி 12ஆம் வகுப்பு மாணவரை பழிவாங்க திட்டமிட்டு இருக்கிறார். "இனிமே யாருக்காக நான் வாழனும்" - காதலன் இறந்த அதே தேதியில் உயிரை மாய்த்த காதலி.. கன்னியாகுமரியில் சோகம்.! 

12 ஆம் வகுப்பு மாணவனை பழிவாங்க திட்டம் :

தனது வகுப்பில் படிக்கும் சக தோழரான 15 வயது சிறுவனிடம் இது தொடர்பாக கூற, இருவரும் சேர்ந்து அப்பகுதியில் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 17 வயது சிறுவர்கள் 3 பேரிடம் பேசி 5 பேராக கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவில் மாணவியின் தம்பி உட்பட 5 சிறார்கள் 12ஆம் வகுப்பு மாணவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மாணவரை சந்தித்து பேச வேண்டும் என அழைத்துள்ளனர்.

மாணவனுக்கு அரிவாள் வெட்டு :

அதனை ஏற்று மாணவரும் சிறுவர்களுடன் சென்ற நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவரை அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். படுகாயத்துடன் 12ஆம் வகுப்பு மாணவர் அலறிய நிலையில், அங்கிருந்து சிறுவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு மாணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணையில் பகீர் :

இதனிடையே சிறுவனின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சேரன்மாதேவி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 5 சிறார்களையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்த போது, அக்காவுடன் பழகுவதை 12 ஆம் வகுப்பு மாணவர் நிறுத்தாததால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.