ஏப்ரல் 07, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, அம்பேத்கர் நகர் காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவரின் மகன் சந்தோஷ் (20). ஆறுமுகம் என்பவரின் மகள் வீணா (17). திருப்பூர் பலவஞ்சிபாளையம் ஜெயலலிதா நகரில் வசித்து வருபவர் ஆனந்தன். இவரின் மகள் பிரீத்தி (18). சந்தோஷ், வீணா, பிரீத்தி ஆகியோர் உறவினர் என்பதால் நட்பு ரீதியான பழக்கம் உண்டு. வீணா தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருக்கிறார். பிரீத்தி ஐடிஐ பயில்கிறார். சந்தோஷ் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுகிறார். Earthquake Today: லடாக், அந்தமான், ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்; நிலநடுக்க ஆய்வு மையம் உறுதி.!
நீரின் ஓட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு சோகம்: நேற்று இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் பொங்கலூர் சென்று, அங்குள்ள கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்றுள்ளனர். வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக சென்றபோதும், அதன் விபரீதம் தெரியாமல் அலட்சியமாக குளித்துள்ளனர். இதனிடையே நீரின் வேகத்தில் மூவரும் அடித்து செல்லப்பட்டுள்ளனர். மூவரும் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராத காரணத்தால் பதற்றமடைந்த பெற்றோர், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மூவரும் சடலமாக மீட்பு: உடனடியாக விசாரணை நடத்திய காவல் துறையினர், இவர்களின் இருசக்கர வாகனம் வாய்க்காலுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்தனர். பின் தீயணைப்பு படையினர் உதவியுடன் உடல் தேடப்பட்டது. பிரீத்தி மற்றும் வீணாவின் உடல் வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டு அரசு விதைப்பண்ணை பகுதியில் மீட்கப்பட்டது. தீவிர தேடலுக்கு பின் சந்தோஷின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக அவிநாசிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.