ஜூலை 18, ராயபுரம் (Chennai News): சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த தமிழ்நாடு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், ஆற்காடு பகுதியை சேர்ந்த ரௌடி சுரேஷ் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், பழிக்கு பழியாக சுரேஷின் சகோதரர் பாலா தலைமையிலான குழு ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்டியது அம்பலமானது. Political Party Representative Killed: நடுரோட்டில் துண்டுதுண்டாக வெட்டிக்கொல்லப்பட்ட அரசியல்கட்சி பிரதிநிதி; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.!
அடுத்தடுத்து கைது செய்யப்படும் புள்ளிகள்:
ஆம்ஸ்ட்ராங்கின் கொலை விவகாரத்தில் அரசியல்புள்ளிகளின் பங்கும் உள்ளதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பொன்னை பாலா, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று அதிமுக நிர்வாகி மலர்க்கொடி, வழக்கறிஞர்கள் அருள், ஹரிஹரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், திமுக நிர்வாகி சதிஷ் என்பவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். பாஜக நிர்வாகி அஞ்சலையை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவு:
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி மலர்க்கொடி சேகரை, கழகத்தில் இருந்து நீக்கி அறிவிப்பதாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கிறார். அதிமுக திருவெல்லிக்கேணி மேற்கு, ஜாம்பஜார் பகுதியை சேர்ந்த தாதா தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்துள்ளார். சேகர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டார். அவரின் மறைவுக்கு பின்னர் மலர்க்கொடிக்கு அதிமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டது.