ஜூன் 20, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் (Kalvarayan Hills) மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக காய்ச்சி விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை (Kallacharayam), கள்ளக்குறிச்சி நகர் கருணாபுரம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் குடித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவர்களில் தற்போது வரை 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Kallakurichi Illicit Liquor Case: விஷச்சாராயம் அருந்தி 31 பேர் அடுத்தடுத்து மரணம்; 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கிடுகிடுவென அதிகரிக்கும் உயிர்ப்பலி.!
ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு:
இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கள்ளக்குறிச்சி விவரம் தொடர்பாக விசாரணை செய்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மெத்தனால் கலந்த உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்படுவார்கள். எஞ்சிய சாராயத்தை அழிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்த்த இரங்கலை நான் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அறிக்கை அளிப்பார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் நிதிஉதவி வழங்கப்படும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். ஓய்வுபெற்ற நீதிபதி கோபு தாஸின் தலைமையில் செயல்படும் ஆணையம், சம்பவம் குறித்து விசாரணை நடத்தும். அவர் வழங்கும் பரிந்துரைகள் அரசால் பரிசீலிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.