Minister Senthil Balaji Arrest Visual (Photo Credit: ANI)

ஜூன் 14, சென்னை (Tamilnadu Politics): கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் உறவினர்கள், அவர்களின் நண்பர்கள் என பலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டது, பலகோடி மதிப்புள்ள ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த நிலையில், நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் முடிவில் முறைகேடுகள் உறுதியான காரணத்தால், அவர் நேற்று நள்ளிரவு 01:30 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

அப்போது, திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கதறி அழுது மயங்கி விழுந்த காரணத்தால், அவசரமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் திமுக தரப்பு அமைச்சர்கள் மருத்துவமனையில் முகாமிட்டுள்ளனர். திமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்துள்ளதால், காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் சேகர் பாபு இதுகுறித்து பேட்டி அளிக்கையில், "அமைச்சர் செந்தில் பாலாஜியின் காதுகளில் காயம் இருந்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டப்படி விசாரணை செய்யவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்துள்ளார்.