நவம்பர் 24, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் அருகே திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்ற தனியார் பேருந்தும், சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி நோக்கி வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. Cuddalore: மின்கம்பி அறுந்து விழுந்து பறிபோன 3 உயிர்கள்.. கடலூரில் மழையினால் துயரம்.!
பேருந்து விபத்தில் 6 பேர் மரணம்:
இந்த விபத்தில் பேருந்தில் முன்பக்கம் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கி பயணிகள் படுகாயமடைந்து அலறியுள்ளனர். இதனை கண்ட அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்களை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு:
விபத்தில் பலரும் உயிரிழந்ததால் மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பரண்டு, டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் 20க்கும் மேற்பட்ட அவசர ஊர்தி குழுவினரும் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், இச்சம்பவத்தில் 5 பெண்கள், 1 ஆண் என 6 பேர் பலியாகியது தெரியவந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று பாதையில் வாகனங்களை திருப்பி விட்டு போக்குவரத்தை காவல்துறையினர் சரி செய்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தென்காசி தனியார் பேருந்து விபத்து தொடர்பான வீடியோ (Tenkasi Private Bus Accident Video):
தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
தென்காசி மாவட்டம் இடைகால் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. #Tenkasi #Accident #Bus pic.twitter.com/3zXZV0sEFJ
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 24, 2025