நவம்பர் 24, கடலூர் (Cuddalore News): கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பு, சி.சாத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் மரியசூசை (வயது 70). இவரது மனைவி பெலோன்மேரி. தம்பதிக்கு ஆரோக்கியதாஸ் என்ற ஒரு மகனும், ஆறு மகள்களும் இருக்கின்றனர். ஆரோக்கியதாஸ் கார் டிரைவராக வேலை செய்து வரும் நிலையில், குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடன் இவரது பெற்றோரும் வசித்து வரும் நிலையில், தந்தை தனியார் பள்ளி காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தபணி நடைபெறுவதால் விண்ணப்பத்தை வந்து பூர்த்தி செய்து தருமாறு உறவினர்கள் தெரிவித்ததால் தனது மனைவியுடன் மரியசூசை ஊருக்கு புறப்பட்டுள்ளார்.
மின்கம்பி அறுந்து விழுந்து சோகம்:
இருவரும் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரார்த்தனை செய்த நிலையில், உறவினர் வனதாஸ் மேரி என்பவருடன் ஆலயத்தின் முன் புறம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென ஆலய வளாகத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்து ஆலயத்திற்கும், மற்றொரு வீட்டிற்கும் இடையில் சென்ற மின் கம்பி மீது விழுந்துள்ளது. இதனால் அறுந்த மின்கம்பி மழைக்கு ஒதுக்குப்புறமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த மூவர் மீதும் விழுந்து மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். Gold Rate Today: தங்கப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. சரிந்தது தங்கம் விலை.. வெள்ளி விலையும் குறைவு.!
போலீசார் விசாரணை:
இச்சம்பவத்தில் அருகில் நின்று கொண்டிருந்த கனகராஜ் என்பவரும் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் உடனடியாக மின் இணைப்பை துண்டித்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த மக்கள், காயம் அடைந்தவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தியதில் மின்கம்பி அறுந்து விழுந்து மூவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.