
பிப்ரவரி 26, பெங்களூரு (Technology News): இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனம் தனது ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பள உயர்வுகள் முந்தைய ஆண்டுகளை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பள திருத்தக் கடிதங்களை அனுப்பி, பெரும்பாலான ஊழியர்களின் செயல்திறன் மதிப்பீட்டைப் பொறுத்து 5% முதல் 8% வரை சம்பள உயர்வுகளை வழங்கியது. அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, அதிக செயல்திறன் கொண்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் இரட்டை இலக்க உயர்வை பெற்றனர். WhatsApp Tips: வாட்ஸ் அப் டிப்ஸ்.. மெசேஜை இனி ஹைட் செய்து கொள்ளலாம்..!
சம்பள உயர்வு:
நிறுவனம் ஊழியர்களை 'எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தல்', 'பாராட்டத்தக்க செயல்திறன்' மற்றும் 'சிறந்த செயல்திறன்' என 3 செயல்திறன் பிரிவுகளாக வகைப்படுத்தியது. இதில், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தவர்கள் பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு 5-7% சம்பள உயர்வு கிடைத்தது. அதே நேரத்தில் பாராட்டத்தக்க செயல்திறன் உள்ளவர்கள் என்று மதிப்பிடப்பட்டவர்களுக்கு 7-10% சம்பள உயர்வு கிடைத்தது. மேலும், சிறந்த செயல்திறன் கொண்டவர்களுக்கு 10% முதல் 20% வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. மேம்பாடு தேவை என்று மதிப்பிடப்பட்ட ஊழியர்களுக்கு எந்த சம்பள உயர்வும் கிடைக்கவில்லை. சமீபத்திய சம்பள உயர்வு செப்டம்பர் 2023 முதல் அக்டோபர் 2024 வரையிலான மதிப்பீட்டு காலத்தை அடிப்படையாகக் கொண்டது.
தொழில்துறையில் மந்தநிலை:
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு நவம்பரில் கடைசி ஊதிய திருத்தத்துடன் ஒப்பிடும்போது, அனைத்து செயல்திறன் பிரிவுகளிலும் சமீபத்திய சம்பள உயர்வுகள் 5-10% குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் செயல்திறன் போனஸும் குறைவாக உள்ளது. இது தற்போதைய தொழில்துறை மந்தநிலையை பிரதிபலிக்கிறது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சுமார் 3.23 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். நவம்பர் 1, 2023க்குப் பிறகு இன்ஃபோசிஸ் மேற்கொண்ட முதல் சம்பளத் திருத்தம் இதுவாகும். பணத்தைச் சேமிக்கும் நோக்கில், நிறுவனம் முன்பு FY22 இல் சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருந்தது, மேலும் அதன் வருடாந்திர மதிப்பீட்டுச் சுழற்சியை அக்டோபர் 2023 இல் மட்டுமே மீண்டும் தொடங்கியது.
புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டம்:
இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி ஜெயேஷ் சங்கராஜ்கா (Infosys CFO Jayesh Sanghrajka), கடந்த மாதம் இந்தியாவில் 6-8% சம்பள உயர்வை நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். நிச்சயமாக, அதிக செயல்திறன் கொண்டவர்களுக்கு மிக அதிக சம்பளம் கிடைக்கும் என்றார். ஆனால், தற்போது குறைவான சம்பள உயர்வு தான் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 2024-25 நிதியாண்டில் 15,000 புதியவர்களை பணியமர்த்துவதற்கான அதன் திட்டம் தொடர்ந்து பாதையில் இருப்பதாகவும், அடுத்த நிதியாண்டில் 20,000 புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது.