UTS App Logo (Photo Credit: YouTube)

நவம்பர் 11, சென்னை (Technology News): ரயில்வேயின் யுடிஎஸ் செயலி (UTS App) மூலமாக டிக்கெட் பதிவு செய்வோரிடம் கட்டணம் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்டாலும், மொபைல் செயலியில் டிக்கெட் எடுக்கவில்லை என காட்டுவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இதனால், பயணிகள் டிக்கெட் பரிசோதகர்களிடம் அபராதம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுக்காக கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யுடிஎஸ் மொபைல் செயலி செயல்பாட்டில் உள்ளது. சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முன்பதிவில்லாத டிக்கெட்டை இந்த செயலி வாயிலாக எடுத்து, பயணிகள் எளிதாக பயணம் செய்து வருகின்றனர்.

தொழில்நுட்ப கோளாறு:

இந்நிலையில், யுடிஎஸ் செயலியில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பயணச்சீட்டு பதிவு செய்வோரின் கட்டணம் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டாலும், மொபைல் செயலியில் பயணச்சீட்டு எடுக்கவில்லை என காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ரயில் டிக்கெட்களுக்கு பணம் செலுத்திய பின்பு அதற்கான குறுஞ்செய்தி யுபிஐ மூலம் அனுப்பப்படுகிறது. ஆனால், ரயில்வேயின் (Indian Railways) யுடிஎஸ் செயலியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதற்கோ, டிக்கெட் பதிவாகின்றதா என்பதை உறுதி செய்யும் வகையிலோ எந்த தகவலும் அனுப்பப்படுவதில்லை. ரயில் பயணத்தின்போது, கட்டணம் செலுத்தியதற்கான பயணிகளின் யுடிஎஸ் செயலியை டிக்கெட் பரிசோகர்கள் சோதனை செய்யும்போது, தொழில்நுட்ப கோளாறால் டிக்கெட் பதிவாகவில்லை என்பது தெரிய வருகிறது. செயலியின் தொழில்நுட்ப கோளாறுகளுக்கு பயணிகளே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, டிக்கெட் பரிசோதகர்கள் அபராதம் விதிக்கின்றனர். இதனால், பயணிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

அபராதம்:

இதுகுறித்து சென்னை வேளச்சேரியை சேர்ந்த ரயில் பயணி ஒருவர் கூறுகையில், தினசரி மின்சார ரயிலில் பயணிக்கிறேன். ரயில் டிக்கெட்டை யுடிஎஸ் செயலி மூலமாக எடுத்து பயணித்து வருகிறேன். நேற்று (நவம்பர் 10) காலை பெருங்குடியில் இருந்து முண்டகக்கண்ணி அம்மன் நிலையத்துக்கு யுடிஎஸ் செயலி மூலமாக டிக்கெட் பதிவு செய்திருந்தேன். இதற்காக, ரூ. 5 கட்டணம் எடுக்கப்பட்டது. ஆனால், டிக்கெட் பதிவாகவில்லை. இதனால், ரூ. 255 அபராதம் கட்ட வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அபராதம் விதித்தது தொடர்பாக, ரயில்வே நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, 'யுடிஎஸ் செயலியில் ஏற்படும் இதுபோன்ற பிரச்சனைகள் குறித்து நிர்வாக ரீதியாக புகார் அனுப்பியுள்ளோம். ரயில் கட்டணம் செலுத்தியும் டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு, மூன்று நாட்களுக்குள் கட்டணத் தொகை திரும்ப கிடைத்துவிடும்' என்றனர்.