V Narayanan ISRO (Photo Credit: @21sparksacademy X)

ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): மத்திய அரசு இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை (Indian Space Research Organization ISRO) நிறுவனத்தின் அடுத்த தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது. தற்போது பதவிப் பொறுப்பில் இருக்கும் எஸ்.சோமநாத், தனது பதவியை நிறைவு செய்ய உள்ளார். இதனை முன்னிட்டு அடுத்தபடியாக இஸ்ரோ தலைவர் பொறுப்புக்கு வி. நாராயணன் (V Narayanan) தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் வரும் ஜனவரி 14 2025 முதல் 2 ஆண்டு காலம் பதவியில் நீடிப்பார் அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரையில் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவுக்காக பணி:

கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட வி. நாராயணன், தற்போது இஸ்ரோ அமைப்பின் தலைவராக பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளது தமிழர்களுக்கு பெருமையான ஒன்றாகவும் கவனிக்கப்படுகிறது. விண்வெளி துறையின் செயலாளராகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகவும் இவர் பணியாற்றுவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ராக்கெட் மற்றும் விண்கலம் ஏவுதல் தொடர்பான பிரிவில் பணியாற்றி வந்த நாராயணன், கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவுக்காக தனது பணியை நல்கி வந்துள்ளார். விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியை தொடங்கியவர், படிப்படியாக திறன் அடிப்படையில் சந்திராயன், ககன்யான் உட்பட பல்வேறு செயல் திட்டங்களுக்கு தனது பங்களிப்பையும் வழங்கி இருக்கிறார்.