Heatwave in Asian Countries, மே 02, ஆசியா (World News): கால நிலை மாற்றம் காரணமாக வெப்பநிலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எப்போதும் இல்லாத அளவில் பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து வெயிலானது வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து காலை 8 மணியிலிருந்தே வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக வீட்டிற்குள் மக்கள் வெளியே செல்லவே அஞ்சும் நிலை வந்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த நிலை இல்லை. பெரும்பாலான ஆசிய நாடுகளில் இதே நிலை தான் இருக்கிறது.

வெப்ப அலை: ஆசியாவில் மிக மோசமான வெப்ப அலை ஏற்பட்டுள்ளது. பன் மணிலாவில் கடந்த சனிக்கிழமை 38.8 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. வங்கதேசத்தில் வெப்பம் 43 டிகிரி செல்சியஸை எட்டியதால் பள்ளிகள் மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.  தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 43.4 செல்சியஸ் ஆகும். மியான்மரில் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் நிலைமையோ படுமோசமாக உள்ளது. இருப்பினும் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் தான் இந்தியாவைக் காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் இந்தியா உலகிலேயே அதிக வெப்பநிலைக்கு ஆளாகக்கூடும் நாடாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மக்களுக்கு எச்சரிக்கை: இப்படி பல்வேறு நாடுகளிலும் வெயில் அதிகமாக இருப்பதால் பல பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பயிர்களும் படுமோசமாக சேதம் அடைந்துள்ளன. மதியத்திற்கு மேல் யாரும் வெளியே வர வேண்டாம் என்று பல நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் பள்ளிக்கூடங்களில் மூடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தினால் மக்களை எச்சரிக்கையோடு இருக்குமாறு அனைத்து நாடுகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.