Sunita Williams Return (Photo Credit: @RahulCh9290 X)

மார்ச் 19, நியூயார்க் (World News): இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் (Astronaut Sunita Williams) போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார் லைனர் விண்கலத்தின் மூலம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 05ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். 10 நாள் ஆய்வு முடிந்து பூமிக்கு திரும்புவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமி திரும்ப முடியவில்லை. பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த முயற்சியும் தோல்வி அடைந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் (Butch Wilmore), ரஷ்யாவின் அலக்சாண்டர் உள்ளிட்ட ஏழு பேர் அங்கு தங்கி இருந்தனர். Sunita Williams: பூமிக்கு திரும்புவதில் மீண்டும் சிக்கல்.. சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.., நாசா விளக்கம்..!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்:

இந்நிலையில், 286 நாட்கள் விண்வெளியில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முன் வந்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது. அதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்ற நிலையில், நேற்று முன்தினம் (மார்ச் 17) அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இணைந்தது. இதனையடுத்து, இந்திய நேரப்படி நேற்று (மார்ச் 18) காலை 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு புறப்பட்டது. அதில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்பனூர் ஆகியோர் டிராகன் விண்கலத்தின் கேப்சூலில் அமர்ந்தனர்.

பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்:

நாசா திட்டமிட்டபடி, 10:35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் பிரிந்தது. சுமார் 17 மணிநேர பயணத்தை தொடர்ந்த நிலையில், இன்று (மார்ச் 19) இந்திய நேரப்படி அதிகாலை 3:27 மணிக்கு பூமியை வந்தடைந்தது. சுமார் 3:15 மணியளவில் அதிவேகமாக பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. வளிமண்டலத்திற்குள் நுழைந்ததும் டிராகன் விண்கலத்தின் வேகம் தானாகவே குறைந்த நிலையில், நான்கு பெரிய பாராசூட்கள் விரிந்தது. டிராகன் விண்கலம் தனது வேகத்தை குறைத்து கடலில் பாதுகாப்பாக இறங்கியது. உடனே, அங்கிருந்த மீட்பு குழுவினர் விண்கலத்தின் கேப்சூலை மீட்டு வீரர்களை பத்திரமாக அழைத்து வந்தனர். மேலும், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு பிறகு அவர்கள் பொதுவெளியில் பேச உள்ளனர். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய நிகழ்வை நாசா உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியது. உலக மக்கள் அனைவரும் இதனை பாராட்டி வருகின்றனர்.

வீடியோ இதோ: