ஆகஸ்ட் 18, கலிபோர்னியா (World News): அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் டியாகோ நகரில் வசித்து வருபவர் பிரிட்னி மே லியோன் (வயது 31). இவரது காதலன் சாமுவேல் கப்ரேரா (Samuel Cabrera). பிரிட்னி சமூக வலைதளங்களில் தன்னை குழந்தை பராமரிப்பு பணியாளராக அடையாளம் காட்டி இருக்கிறார். இதனை நம்பி தம்பதிகளாக இருவரும் வேலைக்குச் செல்லும் பெற்றோர் பிரிட்னியின் பராமரிப்பில் தங்களது குழந்தைகளை விட்டுச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்காக அவருக்கு ஊதியமும் வழங்கப்பட்டுள்ளது. Pakistan Floods: மேகவெடிப்பால் வெள்ளத்தில் சிக்கி 300 பேர் பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
காதலனுடன் சேர்ந்து குழந்தை பராமரிப்பாளர் செய்த இழிசெயல் :
இதனிடையே சமீபத்தில் 7 வயதுடைய சிறுமியின் பெற்றோர் அவரை பிரிட்னியிடம் ஒப்படைத்து வேலைக்கு சென்றுள்ளனர். பின் மகளை தங்களுடன் அழைத்துச் சென்ற நிலையில், மீண்டும் பெற்றோர் சிறுமியை குழந்தை பராமரிப்பாளரிடம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அப்போது சிறுமி தான் செல்லவில்லை என அழுதுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதாவது பிரிட்னி தனது காதலரான சாமுவேல் கப்ரேராவுடன் சிறுமியை அனுப்பி வைத்துள்ளார். அப்போது சாமுவேல் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து இருக்கிறார்.
3 முதல் 7 வயதுடைய குழந்தைகள் டார்கெட் :
மேலும் இவர்களின் கணினியில் பல சிறுமிகளின் பலாத்கார வீடியோ இருப்பதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சாமுவேல் மற்றும் அவரது காதலி பிரிட்னியை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 முதல் 7 வயதுடைய பல ஆட்டிசம் பாதித்த குழந்தைகளையும், சிறப்பு கவனத்திற்குரிய குழந்தைகளையும் பாலியல் ரீதியாக சாமுவேல் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிக்கு பரோல் இல்லாத 8 ஆயுள் தண்டனை :
இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் அறிமுகமாகி பின் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய வீடியோ வைத்து சிக்கி இருக்கின்றனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், ஜாமினில் வெளியே வந்து இந்த செயலை அரங்கேற்றி இருக்கின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளியான சாமுவேலுக்கு பரோல் இல்லாத 8 ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டது. மேலும் 295 ஆண்டுகளுக்கு மேலான கூடுதல் சிறை தண்டனையும் அளிக்கப்பட்டது.
பெண்ணுக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை :
இதனை தொடர்ந்து பிரிட்னி மே லியோன் மீதான வழக்கு நடந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றுத்திறன் கொண்ட சிறுமிகளை காதலன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உடந்தையாக இருந்த பிரிட்னிக்கு 100 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.