PM Narendra Modi | Former US President Donald Trump (Photo Credit: @ANI X / Wikipedia Commons)

ஜூலை 14, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவில் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில், குடியரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் தீவிர களப்பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. Trump Rally Shooting: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிசூடு; அமெரிக்காவில் பகீர் சம்பவம்.! 

உளவுத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் நன்றி:

நல்வாய்ப்பாக இந்த விவகாரத்தில் டிரம்ப் காதுகளை ஒட்டியபடி குண்டு பாய்ந்த நிலையில், லேசான காயத்துடன் அவர் அதிஷ்டவசமாக தப்பித்தார். துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தான் உடல் நலத்துடன் இருப்பதாகவும், தன்னை காப்பாற்றிய அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு நன்றி என்றும் ட்ரம்ப் அறிவித்து இருக்கிறார். ட்ரம்ப் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடனும் கண்டனம் தெரிவித்து, விரைந்து நலம்பெற வேண்டுவதாகவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் கண்டனம்:

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "எனது நபர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது. இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசியல் மற்றும் ஜனநாயகத்தில் வன்முறைக்கு எந்த விதமான இடமும் இல்லை. விரைவில் அவர் குணமடைய நான் வாழ்த்துகிறேன். எங்களின் எண்ணமும் பிரார்த்தனையும் அமெரிக்க மக்களுடன் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.