US President Donald Trump | Tik Tok Logo (Photo Credit: @DrSJaishankar X / Pixabay)

ஜனவரி 21, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 47 வது அமெரிக்க அதிபராக நேற்று பதவியேற்றார். 45வது அதிபராக பணியாற்றியவர், 46 வது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 47வது அதிபர் தேர்தலில் களம்கண்டு வெற்றியடைந்து, நேற்று மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர்கள், மூத்த தலைவர்கள், பிற நாட்டு அதிபர்கள் & பிரதமர்கள், தொழிலதிபர்கள் என பலர் முன்னிலையில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வேன் என வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

டிக் டாக் (TikTok in US) செயலிக்கு அவகாசம்:

மேலும், அமெரிக்க நலன்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் சூளுரைத்துள்ளார். இதனிடையே, அமெரிக்க அரசு நிர்வாகத்தால் முடக்கப்பட்ட டிக் டாக் மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் டிக் டாக் செயலிக்கு புதிய நிபந்தனையுடன் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டிக் டாக் செயலியை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வாங்க வேண்டும் என நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. Glenn Maxwell: அதிக டி20 சிக்ஸர்கள்; ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளி மேக்ஸ்வெல் புதிய சாதனை..! 

75 நாட்கள் இறுதி கெடு:

அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்க 75 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கெடு முடியும் வரை டிக் டாக் செயலி பயன்பாட்டில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்கினால், அதனை பயன்படுத்தும் பயனர்களுக்கும், அதனால் வருமானம் பார்க்கும் நிறுவனமும் முழு அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும்.

புதிய ரூட்டில் ட்ரம்ப்:

சீனாவை பூர்வீகமாக கொண்ட டிக் டாக் செயலி, மக்களின் தரவுகளை சேகரித்து மோசடி செயல்களில் ஈடுபடுவதாகவும், முறைகேடான பணப்பரிவர்த்தனை விவகாரத்தில் சிக்கியதாகவும் டிக் டாக் செயலியை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது. இதனிடையே, அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்றுள்ள ட்ரம்ப், டிக் டாக் செயலியின் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஏற்கனவே தனது எதிர்கால திட்டத்திற்காக ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதைப்போல, அவரே டிக் டாக் செயலியை வாங்குவாரா? அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப பிரிவு நிறுவனங்கள் டிக் டாக் செயலியை வாங்கி நடத்துமா? என கேள்விகள் எழுந்துள்ளன. யாரும் டிக் டாக் செயலியை வாங்க முன்வராத பட்சத்தில், 75 நாட்களுக்கு பின் அமெரிக்காவில் டிக் டாக் செயலி முடக்கப்படும்.