நவம்பர் 06, வாஷிங்க்டன் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidental Election 2024) வாக்குப்பதிவு நேற்று (நவ.5) அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் கடந்த தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்த, குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார்.
அமெரிக்க வரலாற்றில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல்:
அமெரிக்காவை பொறுத்தமட்டில் எலெக்டோரல் வாக்குகள் முறையில், மொத்தம் உள்ள 538 வாக்குகளில், 270 எலெக்டோரல் வாக்குகளை பெறுபவர் அதிபராக தேர்வு செய்யப்படுவார். ஒவ்வொரு மாகாணத்திலும் இருக்கும் எலெக்டோரல் வேட்பாளர்களின் வெற்றி/தோல்வியை பொறுத்து அவை மாறுபடும். இந்நிலையில், நவம்பர் 06ம் தேதியான இன்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்புடன் தொடங்கி இருக்கிறது. உலகமே இந்த முறை அமெரிக்க தேர்தலை உற்றுநோக்கும் வகையில் மக்களுக்கான வாக்குறுதிகளும் அள்ளி வீசப்பட்டன. அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே, மிகக்கடுமையான போட்டியை கொண்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது. US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல்.. வெற்றி வாகையை சூடப்போவது யார்? கமலாவா? டிரம்பா?!
ட்ரம்ப் முன்னிலை:
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாகாணங்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். குறிப்பாக மக்கள் தொகை கணிசமாக கொண்ட முக்கிய நகரங்களில், டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்ட குடியரசு கட்சி தனது வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது. அந்த வகையில், இந்திய நேரப்படி இன்று காலை 07:30 மணியளவில், குடியரசுக்கட்சி ஒக்லஹாமா, இண்டியானா, டென்னிஸி, அலபாமா, மிஸிஸிபி, புளோரிடா, தெற்கு கரோலினா, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் வெற்றி அடைந்து அதிபருக்கான 270 இடங்களில் 101 இடங்களை பெற்றுள்ளது. 6 மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறது.
ஜனநாயக கட்சி பின்னடைவு:
அதேநேரத்தில், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களமிறங்கிய கமலா ஹாரிசின் கட்சி நியூஜெர்சி, மெரிலேண்ட், இலியானால் ஆகிய மாகாணங்களில் வெற்றி அடைந்துள்ளது. 5 மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறது. 270 இடங்களில் 71 இடங்களை கமலா ஹாரிஸின் ஜனநாயக கட்சி வெற்றி அடைந்துள்ளது. அதிபர், செனட், அமெரிக்க மாளிகை ஆகிய பதவிகளுக்கான தேர்தலில் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது. அடுத்தடுத்த மாகாணத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து கமலா ஹாரிஸ் பின்னடைவிலேயே இருக்கிறார்.