ஜூன் 22, சென்னை (Cinema News): இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், நடிகர்கள் கார்த்திக், சந்தானம், காஜல் அகர்வால், பிரபு, ராதிகா ஆப்தே, சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி, எம்.எஸ் பாஸ்கர், சந்தான பாரதி, நாசர் உட்பட பலர் நடித்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.
எம். ராஜேஷின் இயக்கத்தில் வெளியான நகைச்சுவை கலந்த படங்களை தொடர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படமும் நல்ல வெற்றியை அடைந்தது. இப்படத்தில் நடிகர் சந்தானத்தின் பெண் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது.
இப்படத்தில் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கரீனா கபூர் என சந்தானத்திற்கு பெண் வேடமிட்டு, அவர் நகைக்கடை விளம்பரத்தில் "சொக்கத்தங்கம் சொக்கத்தங்கம் ஜுவல்லரி, சொக்கவைக்கும் சொக்கவைக்கும் ஜுவல்லரி" என்ற வசனத்தை பேசியது அன்றைய நாட்களில் படுவைரலானது.
இந்த நிலையில், நடிகர் கார்த்திக் இன்று தனது முகநூல் பக்கத்தில் நடிகர் சந்தானம் பெண் வேடத்தில் இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவு வைரலாகி வருகிறது. படம் வெளியாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டதும் நினைவுகள் என்றும் நெஞ்சில் இருப்பவை தான்.
நடிகர் கார்த்தியின் முகநூல் பதிவு ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் 2ம் பாகத்திற்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இவை குறித்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. முந்தைய ஆண்டுகளில் நடிகர் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தார்.
ஆனால், இன்றளவில் அவர் தனியாக நாயகனாக படம் நடிக்க தொடங்கிவிட்ட நிலையில், அவர் மீண்டும் இரண்டு கதாநாயகர்கள் உள்ள படத்தில் நடிக்க ரசிகர்களும் விருப்பம் தெரிவிக்கின்றனர். அவ்வாறான லிஸ்டில் ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா உட்பட பல படங்களும் இருக்கத்தான் செய்கின்றன.