Adipurush (Photo Credit: Twitter)

ஜூன் 17, சினிமா (Cinema News): ஓம் ராவத் இயக்கத்தில், நடிகர்கள் பிரபாஸ், சைப் அலி கான், கிருதி சானொன், சன்னி சிங் உட்பட பல திரையுலக நட்சத்திரங்கள் நடித்து, முப்பரிமாண தொழில்நுட்பத்துடன் ஜூன் 16 அன்று உலகளவில் வெளியான திரைப்படம் ஆதிபுருஷ். இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது.

வால்மீகியின் இராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இராமனாக பிரபாஸ் நடித்திருந்தார். சைப் அலி கான் இராவணன் கதாபாத்திரத்திலும்,, கீர்த்தி சானொன் ஜானகி (சீதா தேவி) கதாபாத்திரத்திலும், தேவ்டட்டா நாகே அனுமனாகவும் நடித்திருந்தனர். படம் ரூ.500 கோடி செலவில் தயாராகி இருக்கிறது. படம் முழுக்க முழுக்க முப்பரிமாண தொழில்நுட்பம் கொண்டது என்பதால் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்த்த நிலையில், சில இடங்களில் படக்குழுவின் எண்ணம் கேள்விக்குறியை சந்தித்தது. ஆனால், பல இடங்களில் தொடர்ந்து திரையரங்குகளில் மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்தமட்டில் கலவையான விமர்சனத்தை ஆதிபுருஷ் பெற்றுள்ளது. அதற்கு காரணமாக முப்பரிமாண முறை கூறப்படுகிறது. ஏற்கனவே ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வெளியான சமயத்திலும் இதேபோன்ற விமர்சனம் திரை ரசிகர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், பாகுபலி 2, சாஹோ திரைப்பட வரிசையில் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படமும் வெளியான ஒரேநாளில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் ஒரேநாளில் வசூல் உலகளவில் ரூ.140 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.