Actor Delhi Ganesh (Photo Credit: @rameshlaus X)

நவம்பர் 10, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் மிகப்பெரிய துணை நடிகராக, பல ஆண்டுகளாக வலம்வந்தவர் டெல்லி கணேஷ் (வயது 80). இவர் இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் 1944ம் ஆண்டு நெல்லையில் பிறந்து, 1976 முதல் திரைப்படத்தில் நடித்து வந்தார். 1964 முதல் 1974 வரையில், 10 ஆண்டுகள் டெல்லி கணேஷ் (Delhi Ganesh) இந்திய விமானப்படையில் (Indian Air Force) பணியாற்றி வந்த நிலையில், பணியை துறந்துவிட்டு வந்து பின் நடிப்புகளில் கவனம் செலுத்தினார். அவருக்கு இயக்குனர் சிகரம் என போற்றப்படும் கே. பாலசந்தர், 1976ல் திரைப்பட வாய்ப்பை தந்து, திரையுலகில் அவரின் எதிர்காலத்தை உறுதி செய்தார். அவருக்கு கணேஷ் என்ற பெயரை டெல்லி கணேஷ் என்று அறிமுகம் செய்தவரும் அவரே. 

மக்கள் மனதை வென்றவர்:

சிந்து பைரவி, நாயகன், தெனாலி உட்பட பல படங்களில் நடித்து மிகப்பெரிய அடையாளத்தையும் பெற்ற டெல்லி கணேஷ், 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் குணசித்திர கதாபாத்திரங்களில் பெரும்பாலானவை மக்கள் மனதில் இடம்பெற்றவையாக இருக்கும். நடிகர் விமலுடன் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற படத்தில், விமலின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இவர் பல இளைஞர்களின் மனதையும் வென்றெடுத்தார். இதுதவிர சின்னத்திரை தொடர்கள், ஓடிடி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். பட்டினப் ப்ரவேசத்தில் தொடங்கிய அவரின் திரை வாழ்க்கை, இந்த ஆண்டில் வெளியான ரத்னம், இந்தியன் 2, அரண்மனை 4 ஆகிய படங்கள் வரை இடம்பெற்றது. 80 வயதிலும் அவர் திரையுலகுக்கு தனது பங்கை வழங்கி இருந்தார்.

காலமானார் டெல்லி கணேஷ்:

இந்நிலையில், சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில், நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் இயற்கையாக வயது மூப்பு காரணமாக டெல்லி கணேஷின் உயிர் பிரிந்தது. இந்த தகவலை அறிந்த திரையுலகினர் பெரும் சோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். பழம்பெரும் நடிகர்களில் தொடங்கி, இன்றைய திரை நட்சத்திரங்கள் வரை பலருடனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் வாழ்ந்த நடிகர் டெல்லி கணேஷ் மறைந்தது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரின் வீட்டிற்கு பல நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

நடிகரின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல்:

டெல்லி கணேஷின் நடிப்பில் ஒரு சிறிய காட்சி உங்களின் பார்வைக்கு:

நவம்பர் 10, 2024 ஞாயிற்றுக்கிழமை சோகத்தின் உச்சத்தில் எக்ஸ் பயனர்: