அக்டோபர் 01, சென்னை (Cinema News): தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் பல இடங்களில் வந்துகுவிக்கிறது. அதே நேரத்தில், அவரிடம் பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைக்க தொடங்கிவிட்டனர். அந்த வகையில், திரைப்பட இயக்குனர் பேரரசு, சிறிய அளவிலான திரைப்பட தொழிலாளர்களையும் வாழ வைக்கும் வகையில் துணை முதல்வர் உதயநிதி வழிவகை செய்ய வேண்டும். அரசு சார்பில் ஏழைகளுக்கான திரையரங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சிறுபடங்களை காப்பாற்ற முன்வாருங்கள்:
இதுகுறித்து இயக்குனர் பேரரசு (Director Perarasu) பேசுகையில், "துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் குடும்பத்தில் இருந்து வந்தாலும், திரைத்துறையில் நடிகராக பயணித்து, தயாரிப்பாளராக இருந்து, அவர் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கிறார். அவர் துணை முதல்வராக பொறுப்பேற்றது மகிழ்ச்சியானது. சிறுபடங்களை காப்பாற்ற வேண்டும், அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். எழுத்தாளர், நடிகர், தயாரிப்பாளர் என பல சங்கங்கள் உள்ளது. திரைத்துறையில் இருந்து துணை முதல்வராகியுள்ளவரிடம், திரைத்துறை கஷ்டங்கள் குறித்து பேச வேண்டும். Rajinikanth Hospitalized: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி.. முதல்வர் மு.க ஸ்டாலின் ட்விட்.! விபரம் உள்ளே.!
திரையரங்குகளில் கட்டணம் அதிகரித்துள்ளது:
எம்.ஜி.ஆர்., ரஜினி காலத்தில் இருந்து, திரைப்படம் என்பது ஏழைகள் சாதனமாக இருந்தது. அன்றைய காலங்களில் திரையரங்குக்கு உழைப்பவர்கள் பலரும் சென்றார்கள். உழைப்பின் களைப்பை தீர்க்க அவர்கள் திரையரங்கு சென்றார்கள், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை இன்று திரைப்படம் பார்க்கிறார்கள். டிக்கெட், பார்க்கிங், ஸ்னாக்ஸ் என பல விலைகள் உயர்ந்துவிட்டது. நடுத்தர மக்கள், செல்வந்தர்கள் பார்க்கும் வகையில் திரையரங்குகள் மெருகூட்டப்பட்டு, கட்டணமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஏழை எளிய மக்கள் பார்ப்பதற்கான திரையரங்குக்கு இருக்க வேண்டும்.
ஏழையால் ரூ.150 கட்டணம் கொடுக்க முடியாது:
ரூ.150 டிக்கெட் கொடுத்து ஏழை எப்படி படம் பார்க்க முடியும்?. திரைத்துறையில் இருந்து பயணித்தவர் துணை முதல்வராக இருக்கும்போது, அவரிடம் திரைத்துறை சார்ந்த விஷயங்களை கோரிக்கையாக முன்வைத்தால் பலன் இருக்கும். அதன்படி, ஏழைகளின் பங்களிப்பை உறுதிசெய்ய, ஏழை-எளிய மக்கள் திரைப்படம் பார்க்கும் வகையிலான திரையரங்குகளை அரசு அமைக்க வேண்டும்.
அம்மா உணவகம் போல ஏழைகள் திரையரங்கம்:
ஏழைகள் சாப்பிட அம்மா உணவகம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. சினிமா துறையிலும், பிற கூலித்தொழிலாளர்களும் அம்மா உணவகத்தில் பயன்பெற்றனர். அதேபோல, ஏழைகள் பலன்பெற அரசு திரையரங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். ஜி.எஸ்.டி., பிற மத்திய-மாநில வரிகள் உட்பட எதையும் குறைக்க சொல்ல முடியாது. ஏனெனில் அவை ஏறினால், ஏறியது தான். திரையரங்கையாவது ஏழைகளுக்காக அமைக்க வேண்டும்" என பேசினார்.