டிசம்பர் 28, சென்னை (Chennai): தமிழ் சினிமாவில் நேரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர், அல்போன்ஸ் புத்திரன். இப்படத்தை தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளிலும் இயக்கி ஹிட் அடிக்கச் செய்தவர். அதன்பின், இவர் நிவின் பாலியை வைத்து, ஒரு இளைஞரின் மூன்று விதமான காதல் கதைகளைப் பற்றிப் பேசும் வகையில் இயக்கிய படம் தான், பிரேமம். இப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ஹிட்டானது.
விஜயகாந்த் பற்றிய பதிவு: தேமுதிக நிறுவனத் தலைவர், நடிகர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில் விஜயகாந்த் மறைவு குறித்து, அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து வெளியிட்டுள்ள பதிவில், "நான் உங்களை கேரளாவில் இருந்து வந்து ரெட் ஜெயின்ட் மூவீஸ் அலுவலகத்தில் சந்தித்தபோது, உங்களை அரசியலுக்கு வரும்படி கூறினேன். மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியும்படி கூறினேன். இப்போது விஜயகாந்த்தை கொன்றவர்களையும் நீங்கள் தான் கண்டறிய வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கமல்ஹாசனையும் அவர்கள் கொலை செய்ய முயன்றுள்ளார்கள். இதை அப்படியே விட்டுவிட்டால், அடுத்தது நீங்களும், ஸ்டாலின் சாரும் தான் டார்கெட்டாக இருப்பீர்கள். கொலையாளிகளையும் அவர்களின் நோக்கத்தையும் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிமையான விஷயமே" எனத் தெரிவித்துள்ளார். Leo 2 Officially Confirmed: லியோ பார்ட் 2... மீண்டும் இணையும் விஜய் லோகேஷ்..!
அரசியலுக்கு வரும் அஜித்: மேலும் மற்றொரு பதிவில், "இது அஜித்குமார் சாருக்கு. நீங்களும் நிவின் பாலியும் சுரேஷ் சந்திராவும் அரசியலுக்கு வர உள்ளாகக் கூறியதைக் கேட்டேன். பிரேமம் படத்தில் நிவின் பாலியின் நடிப்பைக் கண்டு வியந்த உங்கள் மகள் அனோஷ்காவுக்காக. நிவின் பாலியை வீட்டிற்கு அழைத்து பேசினீர்களே. அப்போது தான் இது பற்றி அறிந்தேன். ஆனால், இதுவரை உங்களைப் பொதுவெளியிலோ அரசியல் கட்சிகளிலோ பார்க்கவில்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்கின்றனர் இல்லையென்றால் நீங்கள் அதை மறந்துவிட்டீர்கள் அல்லது வேறு யாரோ உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள். இது மூன்றும் இல்லையென்றால் எனக்கு கடிதம் வாயிலாக, பொதுவெளியில் விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நான் உங்களை நம்புகிறேன். பொது மக்களுக்கும் நம்புகிறார்கள்" எனப் பதிவிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதிவை நீக்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர் அவர் ஐடி ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறி வருகின்றனர்.