Jigarthanda Double X Poster (Photo Credit: @Netflix X)

டிசம்பர் 05, சென்னை (Chennai): கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஓடிடி மக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் தீபாவளிக்கு ரிலீசாகும் படங்கள் புத்தாண்டுக்கு, புத்தாண்டில் ரிலீசாகும் படங்கள் மார்ச்-ஏப்ரல் கோடை விடுமுறையிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், இன்றோ அவை ரிலீசான ஒரு மாதத்திற்குள் டிஜிட்டல் தளங்களில் பதிவிடப்படுகிறது.

ஜப்பான் படக்குழு: ரஜினிமுருகன் இயக்கத்தில், எஸ்.ஆர் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர் பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் கார்த்திக், அனு இமானுவேல், சுனில், விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ், கே.எஸ் ரவிக்குமார், வாகை சந்திரசேகர், பாவா செல்லதுரை, முகமது இர்ஃபான் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜப்பான் (Japan 2023 Movie).

தீபாவளியை முன்னிட்டு வெளியீடு: இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவு பணிகளை ரவி வர்மன் மேற்கொண்டு இருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10 ஆம் தேதி படம் உலகளவில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கார்த்திக்கின் 25 வது திரைப்படம் ஜப்பான் வெளியாகி, பல எதிர்மறை விமர்சனங்களை பெற்று தோல்வி அடைந்தது.

டிஜிட்டல் உரிமை: இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், ஜப்பான் திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 11 டிசம்பர் அன்று தனது ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

Japan Movie Poster (Photo Credit: @Netflix X)

வெற்றியில் ஜிகர்தண்டா 2 : அதேபோல, தீபாவளிக்கு வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்ற திரைப்படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அமைந்தது. இப்படத்தின் மீதும் பல கலையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், நடப்பு ஆண்டு தீபாவளி ரேசில் இப்படமே வெற்றிப்படமாக அமைந்தது.

கார்த்திக் சுப்புராஜ் படம்: ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், நவீன் சந்திரா, நிமிசா சஜயன், இளவரசு, சீலா ராஜ்குமார், பாவா செல்லத்துரை உட்பட பலரின் நடிப்பில் 10 நவம்பர் 2023 அன்று வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X 2023 Movie).

ஜிகர்தண்டா - ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் தொடர்ச்சியாக இப்படம் வெளியானது. படம் மக்களிடம் நல்லவிதமான வரவேற்பை பெற்றது. ரூபாய் நூறு கோடி செலவில் தயாரான திரைப்படம், நூற்றுக்கணக்கில் பல கோடிகளை குவித்து வசூல் சாதனையையும் செய்தது.

6 மொழிகளில் பார்க்கலாம்: இந்நிலையில், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நெட்ப்ளிக்சில் டிசம்பர் எட்டாம் தேதி வெளியிடப்படுகிறது. விரைவில் ஆங்கில மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டு படம் வெளியாக உள்ளது என நெட்பிளிக்ஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளது.