
ஜூன் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): சென்னை நுங்கம்பாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட பாரில் நடந்த தகராறு குறித்து விசாரிக்கச் சென்ற காவல்துறையினருக்கு, போதைப்பொருள் குறித்த துப்பு கிடைத்தது. இந்த விசாரணையில் அதிமுக பிரமுகர் & திரைப்பட தயாரிப்பாளர் பிரசாத், ரௌடி அஜய் வாண்டையார், கனடா நாட்டைச் சேர்ந்த ஜான், பிரதீப் என அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடந்த விசாரணையில் தயாரிப்பாளர் பிரசாத் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருளை கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
நடிகர் ஸ்ரீகாந்தின் வாக்குமூலம் :
இந்த தகவலின் பேரில் நடிகர் ஸ்ரீகாந்த் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போதைப்பொருளை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் நடிகர் ஸ்ரீகாந்த் தயாரிப்பாளர் ப்ரசாத்திடம் படத்தில் நடித்து வந்துள்ளார். அவரிடம் சம்பள பாக்கியை கேட்கச் செல்லும்போதெல்லாம் சிறுகச்சிறுக போதைப்பொருளை கொடுத்து ஸ்ரீகாந்தை திசைதிருப்பி இருக்கிறார். இதனால் காலப்போக்கில் ஸ்ரீகாந்தும் போதைப்பழக்கத்துக்கு அடிமையானது உறுதி செய்யப்பட்டது. Actor Krishna Arrested: போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணா கைது.!
ஸ்ரீகாந்த் & கிருஷ்ணா கைது (Actor Srikanth Drug Case):
இதனிடையே, ஸ்ரீகாந்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டபோது தலைமறைவானார். இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணாவிடம் காவல்துறையினர் தொடர்ந்து விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் கிருஷ்ணா தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும் மருத்துவ பரிசோதனையிலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் சோதனை :
இதனால் நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போதைப்பொருள் ஏதேனும் உள்ளதா? அல்லது அதனை வாங்கியதற்கான ஆதாரங்கள் உள்ளதா? என காவல்துறையினர் இன்று காலை முதல் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த் போல இவரும் வழக்கில் வசமாக சிக்குவாரா? அல்லது ஸ்ரீகாந்துடன் நட்பில் இருந்தாலும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தாரா? என்பது தொடர்பான விஷயம் விரைவில் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருஷ்ணாவின் மருத்துவ அறிக்கை :
மேலும் "கடந்தாண்டு தனக்கு இதயம் சார்ந்த சிகிச்சை நடந்ததாகவும், இதனுடன் கல்லீரல் தொடர்பான தொற்றும் இருப்பதால் தன்னால் போதைபொருட்கள் எதையும் எடுத்துக்கொள்ள முடியாது. அதனை எடுத்தால் நான் மரணிப்பது மட்டும் தான் எனக்கு பரிசாக இருக்கும். எனக்கும் போதைப்பொருள் பழக்கம் இல்லை" என்று நடிகர் கிருஷ்ணா மருத்துவ அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.