Manipur, Afghanistan Earthquake (Photo Credit: @ANI X)

ஜனவரி 03, புதுடெல்லி (New Delhi): இயற்கை பேரிடர்களில் பல மனித உயிர்களை காவு வாங்கும் விஷயங்களில், நிலநடுக்கம் தற்போது அதிகளவு கவனிக்கத்தக்க நிகழ்வாக இருந்து வருகிறது. ஏனெனில் நிலநடுக்கம் உலகளவில் தற்போது அதிகளவில் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துருக்கியை உலுக்கிய நிலநடுக்கத்தின் பாதிப்பை தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானை புத்தாண்டில் உலுக்கிய நிலநடுக்கம்: அதனை உறுதி செய்யும் பொருட்டு, அவ்வப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, நேபாளம், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டு வருகின்றன. இந்த வருடத்தின் புத்தாண்டு தொடக்கத்தில், ஜப்பானில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கமானது லேசான சுனாமியையும், அதனைத் தொடர்ந்து உயிர் பலிகளையும் ஏற்படுத்தி இருந்தது. தற்போது வரை 57 பேர் ஜப்பானில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் உயிரிழந்திருக்கின்றனர்.

Japan Earthquake 2024 (Photo Credit: NHKWORLD_News X)

ஒரே இரவில் 4 நிலநடுக்கங்கள்: இந்நிலையில், நேற்று ஒரே இரவில் இந்தியாவைச் சுற்றி அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேற்குவங்கம் (West Bangal Earthquake) மாநிலத்தில் உள்ள அலிபுர்தூர் பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.5 புள்ளிகள் என்ற அளவில் பதிவாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் (Manipur Earthquake) உள்ள உக்ருள் நகரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 3 புள்ளிகள் பதிவாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம்: அதேபோல, ஆப்கானிஸ்தானில் மட்டும் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்குள்ள பைசாபாத் (Afghanistan Earthquake) நகரில் இருந்து கிழக்கு திசையில், 126 கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. பைசாபாத் நகரில் இருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் உள்ள 100 கிலோமீட்டர் தொலைவில், 4.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனினும், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் அச்சத்தை தரும் வகையிலேயே அமைந்து வருகின்றன.