ஆகஸ்ட் 06, பாட்னா (Bihar News): பீகார் மாநிலம், தர்பங்கா (Darbhanga) மருத்துவக் கல்லூரியில் செவிலியர் மாணவர்களான ராகுல் குமார் (வயது 25) மற்றும் தனு பிரியா (வயது 24) ஆகியோர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 05) மாலை மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதிக்கு வெளியே இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, தனு பிரியாவின் தந்தை பிரேம்சங்கர் அங்கு வந்துள்ளார். தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ராகுலை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த ராகுல், தன் காதல் மனைவி மடியிலேயே துடிதுடித்து உயிரிழந்தார். Shocking Video: வெள்ளத்தில் காருடன் அடித்துச்செல்லப்பட்ட மக்கள்.. 'மரண ஓலம்'.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
காதலன் சுட்டுக்கொலை:
தனது கண்முன்னே கணவர் கொல்லப்பட்டதைக் (Shot Dead) கண்ட தனு பிரியா, இந்த கொலையில் தனது குடும்பத்தினர் அனைவருக்கும் பங்கு இருப்பதாகக் கூறி கதறி அழுதார். இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட ராகுலின் நண்பர்களும், சக மாணவர்களும் ஆத்திரமடைந்து பிரேம்சங்கரை சரமாரியாகத் தாக்கினர். படுகாயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மருத்துவமனைக்கு விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். இதனிடையே, மாணவர்கள் ராகுலுக்கு நீதி கேட்டு முழக்கமிட்டதால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.
போலீஸ் விசாரணை:
இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "கலப்புத் திருமணம் காரணமாகவே பெண்ணின் தந்தை இந்த கொலையைச் செய்துள்ளார். குற்றவாளிக்கு சிகிச்சை அளிக்க மாணவர்கள் தடுத்ததால் அங்கு தகராறு ஏற்பட்டது. தற்போது அவர் பாட்னாவிற்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, தனது தந்தை மற்றும் சகோதரர்களால் தனக்கோ, தனது காதல் கணவருக்கோ உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கூறி தனு பிரியா நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.