Woman Murder Case in Odisha (Photo Credit: @ndtv X)

ஆகஸ்ட் 08, பெர்ஹாம்பூர் (Odisha News): ஒடிசா மாநிலம், கஞ்சம் (Ganjam) மாவட்டத்தில் தனது மனைவி பூஜாவை கொன்றதாகக் கூறி, 30 வயதான சந்தோஷ் நாயக் மற்றும் அவரது இரண்டு காதலிகளான அனிதா நாயக் (வயது 26), ஸ்ருதி பரிதா (வயது 21) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கடந்த ஆகஸ்ட் 04ஆம் தேதி திங்கட்கிழமை பெல்லகுந்தா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நுவாகோன் கிராமத்தில் நடந்துள்ளது. MBBS Student Suicide: மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

மனைவி கொடூரக் கொலை:

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், கூலித் தொழிலாளியான சந்தோஷ் நாயக், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பூஜா நாயக்கை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, சந்தோஷ் வேறு இரண்டு பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததால், அவருக்கும் அவரது மனைவி பூஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை பூஜா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சந்தோஷ், பூஜாவின் தாயார் சாந்தி நாயக்கிற்கு தகவல் தெரிவித்தார். ஆனால், சாந்தி தனது மகளின் வீட்டிற்கு சென்றபோது, சந்தோஷ் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளார். இருப்பினும், உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகள் ஒரு துணியால் சுற்றப்பட்டு தரையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மூவர் கைது:

இதனால் சந்தேகமடைந்த சாந்தி, தனது மகளை சந்தோஷும் அவரது இரண்டு காதலிகளும் சேர்ந்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி கொலை (Murder) செய்திருக்கலாம் என பெல்லகுந்தா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சந்தோஷ் மற்றும் அவரது 2 காதலிகள் இருவரும் சேர்ந்து பூஜாவைக் கொலை செய்து, அதை தற்கொலை போல நாடகமாடியது தெரியவந்தது. இதனையடுத்து, மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், விசாரணை நடைபெற்று வருவதாக பெல்லகுந்தா காவல்நிலைய ஆய்வாளர் ரெபதி சபர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.