
பிப்ரவரி 08, புதுடெல்லி (New Delhi News): இந்தியாவின் மிகச்சிறிய மாநிலங்களில் ஒன்றாகவும், இந்திய தலைநகரை கொண்ட மாநிலமாகவும் இருப்பது டெல்லி (Delhi). டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025 (Delhi Assembly Elections 2025 Results) வாக்குப்பதிவு, கடந்த 05 பிப்ரவரி 2025 நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, 08 பிப்ரவரி 2025 இன்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் 2025 வெளியாகிறது. இன்று காலை முதலே வாக்குகள் எண்ணப்பட்டு தொடர்ந்து தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. டெல்லியில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சி அமைகிறது. காங்கிரஸ் கடந்த 3 தேர்தலாக ஒரு தொகுதியில் கூட டெல்லி மாநிலத்தில் வெற்றிபெறாமல் தோல்வி அடைந்துள்ளது. Delhi Assembly Election Results 2025: டெல்லியை கைப்பற்றுவது யார்? திடீர் முன்னிலை பெற்ற ஆம் ஆத்மி.. வலுக்கும் போட்டி.!
அரவிந்த் கெஜ்ரிவால் 1,844 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி:
இந்நிலையில், பாஜக புதுடெல்லி வேட்பாளர் பர்வேஸ் சாகிப் 22,034 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். மேலும், அவரை எதிர்த்து போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) 20,190 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். சுமார் 1,844 வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்து வந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2013 சட்டப்பேரவை தேர்தலில் இருந்து, புதுடெல்லி தொகுதியில் வெற்றிகண்ட நபராக இருந்து வந்தார். அவர் தோல்வி அடைந்தது தேசிய அளவில் கவனிக்கப்படுகிறது.

மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதியிலும், ஆம் ஆத்மி 22 தொகுதியிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று இருக்கிறது. இதனால் டெல்லி மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி என்பது உறுதியாகியுள்ளது. 4 முதல் 5 தொகுதிகள் இறுதியில் மாற்றம் இருக்கலாம்.