ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): 18வது மக்களவை பொதுத்தேர்தல் முடிவுகள், ஜூன் 04ம் தேதியான இன்று வெளியாகிறது. உலகளவில் கவனிக்கப்படும் இந்தியா தேர்தல்கள் 2024-ல் 8,320 வேட்பாளர்கள் 543 தொகுதியில் போட்டியிட்டு முடிவை எதிர்நோக்கி இருக்கின்றனர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற சொல்வழக்கு ஏற்ப இன்று மக்களின் தீர்ப்பு வெளியாகிறது. இந்த தீர்ப்பை இந்திய மக்கள் மட்டுமல்லாது, இந்திய அரசை கட்டுப்படும் தீர்ப்பு என்பதால் உலகளாவிய தலைவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். AP Election Results 2024: ஆட்சி மாற்றத்தை சந்திக்கும் ஆந்திர பிரதேசம்; வாழ்த்துக்கள் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.!
பாஜக கூட்டணி முதலிடம்: இன்று காலை முதலாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் தனியே 240 தொகுதிகளில் முன்னிலை வகிக்கும் நிலையில், கூட்டணியுடன் சேர்த்து 296 தொகுதிகளை கடந்து முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 230 தொகுதிகளை கடந்து முன்னிலையில் இருக்கிறது. 17 தொகுதிகளில் பிற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.
கூட்டணிக்கட்சிகளுக்கு அழைப்பு: தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் திமுக-காங்கிரஸ் கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. தர்மபுரி தொகுதியில் பாஜக - பாமக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். கடந்த 2019 மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மத்தியில் ஆட்சி அமைத்திருந்த நிலையில், தற்போது அதற்கு சாத்தியமில்லாமல் போயுள்ளது. இதனால் கூட்டணிக்கட்சி தலைவர்களை பாஜக தலைமை நாளை காலை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதேபோல, காங்கிரஸ் கட்சி தலைமை தனது கூட்டணிக்கட்சி தலைவர்களை இன்று மாலை அல்லது இரவுக்குள் டெல்லி வருமாறு அழைத்துள்ளது.
அதேபோல, டெல்லி பாஜக தலைமை அலுவலகம் மற்றும் ஜேபி நட்டாவின் வீட்டில் பாஜக மூத்த தலைவர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.