PM Narendra Modi | Jagdeep Dhankhar (Photo Credit: @ANI X)

ஜூலை 22, புதுடெல்லி (New Delhi News): இந்திய துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் நேற்று (ஜூலை 21) தனது பதவியை ராஜினாமா செய்வதாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் மூலமாக தகவல் தெரிவித்து இருந்தார். இந்த செய்தி மிகப்பெரிய அதிர்வலையை அரசியல் மட்டத்தில் எழுப்பி இருந்தது. அவரது ராஜினாமா கடிதமும் இன்று குடியரசு தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அவரின் பதவி விலகலை அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் மத்திய அரசு சார்பில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Jagdeep Dhankhar: துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. காரணம் என்ன..? 

ஜகதீப் தன்கர் ராஜினாமா (Jagdeep Dhankhar Resigns):

இதனிடையே, ஜகதீப் தன்கரின் பதவி விலகல் குறித்த காரணம் தேசிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் திடீரென இம்முடிவை எதற்கு எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. அதாவது, ஜகதீப் முன்னாள் ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார். அவர் இதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுப்பதில் தயக்கம் இல்லாதவர் ஆவார். தற்போது திடீரென ஏன் குடியரசு துணைத்தலைவர் பதவியை இழக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. அவருக்கு 2027 வரையில் பதவிக்காலமும் உள்ளது.

ராஜினாமா ஊகங்கள்:

ஜகதீப் பதவி விலகும்போது, தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு முடிவை எடுப்பதாக தெரிவித்து இருந்தார். ஆனால், அவருக்கும் - மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சிக்கிக்கொண்ட நீதிபதி யஷ்வந்த் வர்மா குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க ஜகதீப்பிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். இது ஆளும் தரப்பில் எதிர்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.