Sharon Murder Case in Kerala (Photo Credit: @BobinsAbraham X)

ஜனவரி 20, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பாறசாலை மூறியன்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (வயது 23), ரேடியாலஜி படித்து வந்தார். இப்பகுதி, தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ராமவர்மஞ்சிராய் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்மா (வயது 22) என்ற பெண்ணை அவர் காதலித்தார். இந்நிலையில், அந்த பெண் தனக்கு வேறொரு நபருடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், தன்னுடன் பழகுவதை நிறுத்தும்படி, பலமுறை கூறியதாகவும், அதை அவர் கேட்காமல் தொடர்ந்து காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. Road Accident: இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளம்பெண் பலி; திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்..!

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை:

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி அன்று, கிரீஷ்மாவை சந்திக்க ராமவர்மஞ்சிராய் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு, அவர் சென்றார். அப்போது அவருக்கு, ஆயுர்வேத கஷாயம் எனக் கூறி, பூச்சிக்கொல்லி கலந்த கஷாயத்தை (Sharon Raj Murder Case) கிரீஷ்மா கொடுத்தார். இதை குடித்த ஷாரோன் ராஜ், சில மணி நேரங்களிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, உடலுறுப்புகள் செயலிழப்பால் அக்டோபர் 25ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாரோன் ராஜ் ஆசிட் போன்ற திரவத்தை குடித்ததால், உடலுறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கிரீஷ்மா, அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் அதிர்ச்சி:

விசாரணையில், அவர் ஷாரோன் ராஜை 5 முறை கொலை செய்ய முயன்றதும், இதற்கு அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. மேலும், சம்பவம் நடப்பதற்கு முன், விஷம் கலந்து கொடுத்து எப்படி கொலை செய்யலாம்; அதற்கான தண்டனை விபரங்கள் குறித்து, இணையதளத்தில் கிரீஷ்மா தேடி உள்ளார். இவற்றையெல்லாம், ஆதாரங்களாக வைத்து, அவரையும், அவரது தாய் சிந்து, மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றம் தீர்ப்பு:

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாட்டிங்கரா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கிரீஷ்மா, அவரது மாமா நிர்மலாகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டது. போதிய ஆதாரங்கள் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கசாயத்தில் காதலனுக்கு விஷம் கொடுத்த காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து கேரளா நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் மாமா நிர்மலுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காதலன் ஷரோன் ராஜுக்கு துரோகம் செய்ததோடு, கொலையும் செய்த காரணத்தால், மரண தண்டனை வழங்கப்படுகிறது. துரோகம் செய்த காதலியை தண்டிக்க வேண்டாம் என காதலர் ராஜ் கூறினாலும், சட்டத்தின்பேரில் அவர் செய்த கொடுஞ்செயல் காரணமாக தண்டனை விதிக்கப்படுகிறது.