Mobile Phone (Photo Credit : @thetribunechd X)

ஜூன் 28, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சமூகவலைத்தளத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்து லைக்ஸ்களுக்காக உயிருக்கு ஆபத்தான விஷயங்களையும் செய்து வருகின்றனர். அதனை காணும் சிறுவர்களும் நாமும் அதே போன்று லைக்ஸ் பெற வேண்டும் என்பதற்காக தங்களது வாழ்க்கையை பணயம் வைக்கின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அதிக லைக் வாங்க வேண்டும் என ஆற்று நீரில் வீடியோ, புகைப்படம் எடுத்த சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காணாமல் போன இளைஞர் :

இதுபோன்ற சம்பவங்கள் தொடரும் நிலையில், தற்போது அதிக லைக்ஸ் பெற வேண்டி ஆசைப்பட்ட சிறுவர்கள், இளைஞரை கொலை செய்து அவரது ஐபோனை திருடிய அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவைச் சேர்ந்தவர் ஷதாப் (வயது 19). இவர் தனது தாய்மாமாவின் திருமணத்திற்காக சொந்த ஊரான உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேடி அலைந்த உறவினர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர். கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. கொல்கத்தாவில் மீண்டும் கொடூரம்.! 

கிணற்றடியில் கிடந்த சடலம் :

இந்த நிலையில் அவரது உடல் கிராமத்திற்கு வெளியே கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு அருகில் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஷதாப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில், அவர் தலையில் செங்கலால் தாக்கப்பட்டு கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

செல்போனுக்காக கொலை :

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில், 14 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்கள் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரித்த போது இன்ஸ்டாகிராமில் அதிக லைக்ஸ்களை பெற, சிறந்த வீடியோக்களை உருவாக்க ஷதாப்பை கொன்று அவரது செல்போனை திருடியதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.