
பிப்ரவரி 13, சென்னை (Chennai News): சிறிய இடத்தில் அதிக மீன்களை வளர்க்க உதவும் பயோஃப்ளாக் (biofloc) முறையில் மீன்வளர்ப்பு மேற்கொண்டு லாபம் ஈட்டிவருகிறார் தமிழகத்தை சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான விக்னேஷ். திண்டிவனத்தை அடுத்த `சின்னேரி’ கிராமத்தில் தனது மீன் பண்ணையை அமைத்துள்ள விக்னேஷ், வே2நியூஸ் டிஜிட்டல் இதழுக்காக தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
`பயோஃப்ளாக்’ முறை:
இந்தோனேஷியா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் பயோஃப்ளாக் முறையை பயன்படுத்தியே மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் வடமாநிலங்களில் மட்டும் இந்த முறையில் இறால்கள், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஃப்ளாக் முறையானது இஸ்ரேலில் தோன்றியது. 400 சதுர அடி இடம் இருந்தாலே இந்த முறையில் மீன்களை வளர்க்கலாம். இதில் குளம் ஏற்பாடு செய்வதற்கு மண்ணை தோண்டாமல் சிமெண்ட் தொட்டியில் மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. Agriculture Tips: இயற்கை வேளாண்மை பயன்கள் என்னென்ன? கண்டிப்பா இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க.!
குறைந்த இடமே போதும்:
பயோ ஃப்ளாக் தொட்டி 4 மீ சுற்றளவு, 1.5 மீ உயரத்தில் இரும்பு வலை மற்றும் தார்பாலின் ஷீட்கள் உடன் அமைக்கப்படுகிறது. இம்முறையில் நீரில் ஆக்சிஜன் அதிகளவு இருக்கும் வகையில் ஏரேஷன் அமைப்பு அமைக்கப்படுகிறது. 400 சதுர அடி இடத்திலேயே மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். அதற்கும் குறைவான இடமென்றால் 13 * 13 அடி பரப்பளவுள்ள இடம் தேவைப்படும். இந்த அளவு இடத்தில் 4 தொட்டிகள் வைக்கலாம். வீட்டின் பின்புறமோ, தோட்டத்திலோ அல்லது மாடியிலும் கூட இந்த பயோ ஃப்ளாக் தொட்டி அமைக்கலாம். பராமரிப்பு நேரமும் குறைவு. பெண்கள், சிறுவர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இந்த முறையை பயன்படுத்தி, மீன் வளர்ப்பில் ஈடுபடலாம்.
பிளாங்க்டன் வளர்ப்பு:
தொட்டியில் முதலில் ப்ளாங்க்டன் என்ற நுண்ணுயிரி (பாசி) உருவாக்கப்படுகிறது. அதன் பிறகு அதில் மீன்கள் வளர்க்கப்படுகிறது. ப்ளாங்க்டன், நன்மை தரும் நுண்ணுயிர்களை (பயோஃப்ளாக்) உருவாக்குவதால், அவை மீன்களின் எச்சத்தையும், கழிவுகளையும் மீன்களுக்கே உணவாக மாற்றுகின்றன. இந்த ப்ளாங்க்டன், பயோஃப்ளாக் என்ற சிறு துகள்களை வெளியிடுகிறது, அவையே மீன்களுக்கு சத்தான உணவாக மாறுகிறது. இதில் புரோட்டின் - 49%, கார்போஹைட்ரேட் - 11%, கொழுப்பு- 5%, நல்ல அமிலம் ஆகிய ஊட்டச்சத்துகள் உள்ளன. ப்ளாங்க்டன் உற்பத்தி தான் மீன்களுக்கு முக்கிய தீவனமாக மாறுகிறது. அதனாலேயே இது பயோஃப்ளாக் டெக்னாலஜி என்றழைக்கப்படுகிறது.
தொட்டி அமைக்கும் முறை:
தொட்டியில் சரியான சூழ்நிலையை உருவாக்கிய பின்பே, மீன் குஞ்சுகளை உள்ளே விடவேண்டும். முதலில் பிளாங்க்டனை உற்பத்தி செய்ய வேண்டும். தண்ணீரில் பிஎச் அளவு 6.5-க்கு குறைவாக இருக்கக்கூடாது, அதற்கேற்றவாறு, சுண்ணாம்பு அல்லது உப்பு சேர்த்து சமநிலையை பராமரிக்க வேண்டும். இதனுடன் கார்பன் கலவை சேர்க்க வேண்டும். பிளாங்க்டன் உற்பத்தி ஆவதற்கு இதுவே முக்கியம். கார்பன் கலவையாக மாட்டுச் சாணம் இடலாம். ஆனால், சில வகை மீன்கள் இருக்கும் தொட்டிகளில் சாணம் வேலை செய்யாது, சிவப்பு புழுக்கள் வரத்தொடங்கும். சாணம் வேலை செய்யாதபோது, கடைகளில் கிடைக்கும் ஈஎம் (எஃப்ஃபெக்டிவ் மைக்ரோ ஆர்கானிசம்) என்ற நுண்ணுயிரியை, நாட்டுச்சக்கரையுடன் கலந்து, நொதிக்கச் செய்து (ஃபெர்மெண்டேஷன்), தொட்டியில் பூசவேண்டும். அப்போது தான் பிளாங்க்டன் உற்பத்தியாக தொடங்கும்.
பிளாங்க்டன் உருவாவதற்கு அதிகபட்சம் 50 - 60 நாட்கள் ஆகும். இந்த பிளாங்க்டன்களை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். ஏனென்றால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு, ப்ளாங்க்டன்கள் இறந்துவிடும். இதனால் பிளாங்க்டன்களை மீண்டும் வளர்க்க வேண்டும். கார்பன் கலவையையும் வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லையென்றால், தொட்டியில் அமோனியா வாயு உருவாக தொடங்கும். இதனால் மீன்களுக்கு கண் எரிச்சல் உண்டாகும். பயோஃப்ளாக் முறையில் 1000 லிட்டர் தண்ணீரில், 35 முதல் 40 கிலோ வரை மீன்களை உற்பத்தி செய்யலாம். தொட்டி அமைக்க தார்பாலின், இரும்பு கம்பி, மோட்டார் என மொத்தம் ₹35000 முதல் ₹40000 வரை முதலீடு தேவைப்படும்.
எவ்வளவு லாபம்?
ஒரு தொட்டிக்கு 800 - 1200 மீன் குஞ்சுகளை விட்டால், 4 முதல் 6 மாதங்களில் 420 கிலோ முதல் 450 கிலோ வரை மீன் மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ மீன் ₹120 என்று கணக்கிட்டால் ₹54000 வருமானம் கிடைக்கும். செலவுகள் ₹25000 வரை இருக்கலாம். ஆக, ஒரு தொட்டிக்கு ஒரு மகசூலில் சுமார் ₹30000 வரை லாபம் கிடைக்கலாம். ஆண்டுக்கு 2 மகசூல் பெற்றால், ஓர் ஆண்டுக்கு தொட்டிக்கு ₹50000-க்கு மேல் லாபம் கிடைக்கும். இம்முறையில் மீன்கள் வளர்க்க குறைந்த தண்ணீர் போதுமானது. அறுவடைக்கு பின் சத்துகள் நிறைந்த எஞ்சிய நீரை தோட்டத்துக்கு பாய்ச்சிக் கொள்ளலாம்.
என்னென்ன மீன்கள்?
இந்த முறையில் சில குறிப்பிட்ட மீன்களை மட்டும் தான் வளர்க்க முடியும் என்று சொல்லப்படுவது உண்மையல்ல. இதில் எல்லா வகையான மீன்களையும் வளர்க்கலாம். எனினும் இந்த முறையில் வளர்ப்பதற்கு ஜிலேபி எனப்படும் திலேப்பியா வகை மீன்கள் சரியானவை. இவற்றின் வளர்ச்சி வேகமாக இருக்கும். இதனால் சந்தை விற்பனையில் லாபமும் அதிகமாக இருக்கும். பாறை மீன்களையும் இந்த முறையில் வளர்க்கலாம்.
மீன்களின் எண்ணிக்கை, மீன்களின் எடை, ஆகியவற்றை பொருத்து லாபம் மாறுபடும். ஆனால் போட்ட முதலுக்கு ஒரு கணிசமான லாபத்தை ஈட்டலாம்.