Buldhana Bus Fire Visual (Photo Credit: Twitter)

ஜூலை 01, புல்தானா (Samruddhi Expressway Bus Fire): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் நகரில் இருந்து புனே நோக்கி, நேற்று தனியார் பேருந்து பயணம் செய்தது. இந்த தனியார் பேருந்து சம்ருததி அதிவிரைவு (Samruddhi Expressway) சாலை வழியே பயணம் செய்தது.

அங்குள்ள புல்தானா மாவட்டத்தின் சிந்த்ஹேட்ராஜா (Sindkhedraja) நகரின் வழியே செல்லும் மேம்பாலத்தில் பேருந்து பயணித்தபோது, நள்ளிரவு 01:15 மணியளவில் பேருந்தின் டயர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியுள்ளது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளாகவே, பேருந்தின் டீசல் டேங்க் மீது ஏற்பட்ட அழுத்தத்தினால் தீப்பிடித்து பேருந்து எரிய தொடங்கியுள்ளது.

Buldhana Bus Fire (Photo Credit: Twitter)

நள்ளிரவு நேரம் என்பதால் பயணிகள் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், அவர்களில் பலரும் விபத்தில் வெளியே வராமல் தவித்துள்ளனர். இதனால் 25 பேர் உடல் கருகி நிகழ்விடத்திலேயே பலியாகினர். Balasore Train Accident: 292 பேரை பலிகொண்ட ஒடிஷா இரயில் விபத்து; தென்கிழக்கு இரயில்வே பொதுமேலாளர் மாற்றம்.!

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த மீட்புப்படை அதிகாரிகள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தீயின் வீரியத்தால் அனைவரின் உடலும் கருகி இருந்துள்ளது. 33 பேர் பயணித்த தனியார் பேருந்தில் 25 பேர் பலியாகிவிட, எஞ்சிய 8 பேரும் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் நிதிஉதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.