Astrology (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 20, சென்னை (Chennai News): சனி பெயர்ச்சி 29 மார்ச் 2025 அன்று மீன ராசியில் சனி பூரட்டாதி நான்காம் பாத பிரவேசத்தில் தொடங்கி , 17 மாறுபட்ட நட்சத்திர சாரங்களில் சனி சஞ்சாரம் நிகழ்கிறது சனி பகவான் மீன ராசியில் ஜூன் 3 , 2027 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த கால கட்டத்தில் அதாவது 29 மார்ச் 2025 முதல் ஜூன் 3 , 2027 வரை உள்ள காலத்தில் சனி மீனத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்கலாம்.

மீனம் சனி பெயர்ச்சி பலன்கள் (Meenam Sani Peyarchi Palan 2025):

மீன ராசியில் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்:

சனியின் ஆதிக்கம் உங்களுக்கு அதிகமாக தென்படும். உறவு நிலைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நெருக்கமான உறவுகள் பிரிவின் காரணமாக விலகி செல்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்! அதனால் சமாதான போக்கை கடைபிடித்து விடுவது நன்மையை தருவதாக இருக்கும். உடல் நிலையில் சின்ன சின்ன பாதிப்புகள் உருவாகும். நிதி நிலைமை சீராக இருக்காது. ஆனாலும் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் வராது என்று சொல்லலாம். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி, நிதி உதவி, கடன் உதவி கிடைப்பது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். அதனால் கடனை எதிர்பார்த்து தொழில் மற்றும் செலவுகளை திட்டமிட வேண்டாம். மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயத்தில் சோம்பல் அதிகமாகும். மற்றபடி பாதிப்பு எதுவும் இருக்காது. உயர்கல்வி முயற்சிகளின் கூடுதலான சிரமங்கள் இருக்கும். மற்றபடி தடைகள் இருக்காது. சரியான தகவல் கிடைக்காமல் தடுமாறும் நிலை உருவாகும். வெளியூர் பயணங்கள் பலன் தரும். ஆனால் அலைச்சல் அதிகம் கொடுத்த பிறகுதான் பலன் கைக்கு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், விரத வழிபாடு மற்றும் சிவனை வழிபட உகந்த நேரம் குறித்த முழு விவரம் இதோ..!

நம்பிக்கை தன்மை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத இடங்களில் இருந்து புதிய சிக்கல்கள் உறவுகளில் உருவாகும். திருமண முயற்சிகளில் தடை எதுவும் இருக்காது. ஆகவே மனம் கலக்கம் அடையாமல் தைரியமாக முயற்சி செய்யலாம். திருமணத்தை சனி நடத்திக் கொடுப்பார் என்று நிச்சயம் சொல்லலாம். வியாபாரிகள் மந்தமான சூழ்நிலை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். மற்றபடி லாபத்தில் பாதிப்பு இருக்காது. லாபம் குறையலாம், ஆனால் பாதிப்பு எதுவும் இருக்காது என்று சொல்ல முடியும். சம்பளத்திற்கு வேலை செய்பவர்கள் உயர் அதிகாரிகள் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும், அல்லது இடமாற்றத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அது சங்கடமான சூழ்நிலை தரும் இடமாற்றமாகவே இருக்கும். தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டாம். வந்தால் ஏற்றுக் கொண்டு சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்

மிகுந்த சோதனையான காலகட்டம் என்று நிச்சயம் சொல்ல முடியும். அளவு கடந்த பயத்தினை சனி உருவாக்குவார். இதுவரை வெற்றி கொடி மட்டுமே ஏற்றி வந்த சாதனையாளர்களையும் தோல்வி தழுவி கொள்ளும் காலம். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு மிகவும் நஷ்டமான காலம். கைப்பொருள் தொலைந்து போகும். முதலுக்கு மோசம் வரும் காலம் என்று சொல்ல வேண்டும். உற்பத்தி போன்ற வியாபாரம் செய்பவர்கள் அதிக இழப்பை சந்திப்பார்கள். உடல் நிலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் உடல் நிலம் பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் இருக்கிறது. முன்கூட்டியே மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. மாணவர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகே வெற்றி அடைய இயலும். கடன் தொல்லை அதிகமாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து பண உதவி கிடைக்காது.

இத்தனை சோதனையான காலகட்டமாக இருந்தாலும் மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய அளவில் நட்புகளின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கும் என்பது மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் கிடைத்திருக்கும் மிகப்பெரிய அனுகூலம் என்று சொல்ல வேண்டும். யார் ஆதாயமான நண்பர் யார் சரியான ஆலோசனை சொல்லக்கூடிய நண்பர் என்பதை முன்கூட்டியே ஆலோசித்து அவர்களுடன் நல்ல உறவு நிலைகளை கடைபிடியுங்கள். அதுதான் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு துணையாக இருக்கும். வாடிக்கையாக பங்கு சந்தை போன்ற வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் மிகவும் கவனமாக இருந்து விடுங்கள். பிறரின் பொருளை வைத்து பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வியாபாரத்தில் இருக்கும் ஏஜென்ட் போன்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் .பழிச்சொல்லுக்கு ஆளாக வேண்டி இருக்கும். வியாபாரத்தில் இதுவரை நீங்கள் கட்டிக் காத்து வந்த நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் காலமாக இருக்கிறது.

மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

நெருங்கிய உறவினை பிரியும் சூழல் உருவாகும். நண்பர்கள் விலகிச் செல்வார்கள். உறவினர்கள் விலகிச் செல்வார்கள். கணவன் மனைவி உறவில் விரிசல் அதிகமாகும். உங்கள் எதிர்பார்ப்பை உங்கள் வாழ்க்கை துணை நிறைவேற்றாத தன்மையை சனி அதிகமாகி தருவார். ஆகவே கவலைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் குறித்த அவர்கள் எதிர்காலம் குறித்த சோதனையான காலம் போல சங்கடங்கள் உருவாகி மறையும். ஆனால் அந்த சங்கடங்கள் பெரிதாகாது என்றாலும் தொடர்ந்து தொடர்ந்து வந்து மனதை குழப்பம் அடையச் செய்யும். சோதனையான சனி பெயர்ச்சி காலத்திலும் சனி அனுகூலமான சோதனையையும் முன் வைப்பார்; அளவுக்கு மீறிய சக்திக்கு மீதிய பொறுப்புகளை தலை மீது கொண்டு வந்து வைப்பார் தவிர்க்கவும் முடியாது ஏற்கவும் முடியாது என்று இருதலைக்கொல்லி எறும்பு போல தவிக்க வைப்பார். ஆனால் தைரியமாக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் சனி உங்களிடம் எதிர்பார்க்கும் பக்குவம்.

பெரிய பதவியில் இருப்பவர்கள் குடும்பத்தைப் பிரிந்து தூர தேசங்களுக்கு பயணமாக வேண்டிய கட்டாயம் உருவாகும். இந்தப் பயணம் நன்மையானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். பிரிவு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த மாணவர்களுக்கு அனுகூலமான காலம் என்று சொல்ல வேண்டும். முன்னேற்ற படிக்கட்டுகளில் சனி உங்களை ஏற்றி உட்கார வைத்திருப்பார். பொறுமையுடன் முயற்சி செய்து வெற்றி என்று சொல்லக் கூடிய அளவில் உங்கள் முன்னேற்றம் இருக்கும். ஏழரை சனி காலமாக இருந்தாலும் ஜென்ம சனி என்றாலும் நடத்திக் கொடுக்கும் சாதகமான நிலையைதான் திருமண விஷயத்தில் சனி உருவாக்கி தருகிறார். திருமண தடை அவசியம் விலகி நல்லபடி திருமணம் நடக்கும். உடல் நிலையில் இருந்து வந்த பயமான சூழ்நிலை விலகி விடும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.