டிசம்பர், 10: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வுகள் (Tamilnadu State Govt School Examinations) என்றாலே, தேர்வை எதிர்நோக்கியுள்ள பல மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த புரிதலால் உற்சாகம் ஏற்படும். சிலருக்கு தேர்வில் கேள்விகள் எப்படி கேட்பார்கள்? நாம் அதனை எதிர்கொண்டு வெற்றி அடைந்துவிடலாமா? முடியாதா? என பல கேள்விகள் அடுத்தடுத்து எழும். சிலர் காய்ச்சலுக்கும் ஆளாவார்கள்.

தேர்வு விஷயங்களில் நம் பெற்றோர்கள் கொஞ்சம் கண்டிப்புடன் செயல்படக்கூடியவர்கள் என்பதால், தேர்வு தொடங்கும் பல மாதங்கள் முன்பே தங்களின் பிள்ளைகளை பொதுத்தேர்வுகளுக்கு தயார்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர். சிறப்பு வகுப்புகள், விளையாட தடை என அவரவரின் மன ஓட்டத்திற்கு ஏற்ப பிள்ளைகளுக்கு தடைகளை விதித்து முழுநேர படிப்பில் களமிறக்குவார்கள். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தெரியவேண்டிய சில முக்கிய விஷயங்கள் குறித்து இன்று காணலாம்.

நமது தொடக்கத்தில் உள்ள பொறுமை, நிதானம், பதற்றமின்மை போன்றவை வெற்றிக்கு வழிவகை செய்யும். மாறாக பொறுமை, நிதானத்தை இழந்து பதற்றத்துடன் இருந்தால், அதுவே நமது மன உளைச்சலை அதிகரித்து மதிப்பெண் சரிவுக்கு வழிவகை செய்யும். படிப்பிலும் இறுதி நேரத்தில் உட்கார்ந்து பதற்றத்துடன் படிக்காமல், தற்போதில் இருந்து தேர்வுக்கு தயாராகலாம்.

தேர்வுக்கான இறுதி நாட்கள் வரும்போது பாடங்களை திரும்பி வசித்து அதனை நினைவுபடுத்திவிடலாம். அதேபோல, விடைத்தாளில் நாம் எப்படி எழுதவேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்து வையுங்கள். வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர்கள் நமக்கு விடைத்தாள் தொடர்பான தகவலை முன்கூட்டியே தெரிவிப்பார். ஆகையால், நமக்கு தெரியாதது ஏதும் இருக்குமோ என்ற பயமும் வேண்டாம். Malware Apps: அச்சச்சோ.. உங்களின் செல்போனில் இந்த 5 ஆப்கள் உள்ளனவா?.. தனிப்பட்ட தகவல்கள் திருடப்படும்; கூகுள் எச்சரிக்கை.! 

வகுப்பறையில் ஆசிரியர் நடத்தவுள்ள பாடம் தொடர்பான தகவல் முன்கூட்டியே தெரிந்தால், அப்பாடத்தை ஒருமுறை வாசித்துவிட்டு செல்லலாம். அவ்வாறு செய்தால் ஆசிரியர் பாடம் நடத்தும்போது அது எளிதாக புரிந்து மனதில் நிற்கும். ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் அப்போதே தீர்ந்துவிடும். பாடங்கள் நடத்தப்பட்ட அன்று முதல் ஒரு வாரத்திற்குள் அதனை படித்து முடிப்பது நல்லது.

Student Exam
Students Write Exam

வகுப்பறை அளவில், பள்ளி அளவில் என எளிமையாக நடத்தப்படும் தேர்வுகளையும் எளிதாக எண்ணி செயல்படாமல், அதனை நமக்கான பயிற்சிக்களமாக உபயோகம் செய்து நம்மை சிற்பி போல செதுக்கிக்கொள்ள வேண்டும். தவறுகள் இருக்கும் பட்சத்தில், அதனை அடுத்த தேர்வில் சரி செய்ய வேண்டும்.

பள்ளிகளில் ஆசிரியர்களால் ஒவ்வொரு வகுப்பையும் நேரம் பிரித்து நமக்கு கற்பித்து வருகிறார்கள். அதனைப்போல, வீட்டிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் என குறைந்தபட்ச நேரத்தை ஒதுக்கி கால அட்டவணை இட்டு வையுங்கள். இவை நமது தடுமாற்றத்தை நிலைநிறுத்தி பாடங்கள் பயிலுவதை ஊக்குவிக்கும்.

பொதுத்தேர்வில் நாம் நேரத்துடன் அனைத்தையும் எழுதி முடிக்கும் பழக்கத்தை கொண்டுவர வகுப்பு தேர்வுகள் மற்றும் வீட்டில் எழுதி பார்ப்பது பேருதவி செய்யும். இடர்பாடுகள் இருக்கும் பட்சத்தில் அதற்கான தனி முயற்சியை கையில் எடுக்க வேண்டும். அவை இறுதி தேர்வில் நமக்கு உதவி செய்யும்.

அதேபோன்று, நான் தீவிரமாக படிக்கிறேன் என்ற பெயரில் உடலை வருத்திக்கொண்டு படித்து, தேர்வு நேரத்தில் உடல்சோர்ந்து காணப்படுவது அவர்களின் ஞாபக திறனை குறைக்கும். இதனால் எளிதில் நினைவில் இருந்த பதில்களும் நினைவில் வராது. சரியான நேரம் படிப்பு, விளையாட்டு, ஆரோக்கியமான உணவு, உறக்கம் என்று இருப்பதே நல்லது.

தேர்வுக்கு தயாராகி வரும் தங்களின் மகனை/மகளை அன்புடன் பார்த்துக்கொள்வது குடும்பத்தின் பொறுப்பும் கூட... ஏனெனில் அவர்களுக்கு அமைதியான சூழலை உருவாக்கி தர வேண்டியது உங்களின் கடமையும் தான். எந்த சூழலிலும் அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்க வேண்டாம்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 10, 2022 05:07 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).