அக்டோபர் 04, சென்னை (Chennai News): இந்தியாவிலும் உலகளாவிய அளவிலும் இன்று நடைபெற்று வரும் அரசியல், விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முக்கிய அப்டேட்களை சுருக்கமாக தெரிந்துகொள்ளுங்கள். அதன்படி இன்றைய முக்கிய செய்தியாக குஜராத்தை தாக்கிய சக்தி புயல், மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் உயிரிழப்பு வழக்கு, வங்கிகளில் காசோலைகளுக்கு 1 மணி நேரத்தில் பணம் வழங்கும் புதிய திட்டம், தமிழ்நாட்டில் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய செய்திகள் அதிக கவனம் பெற்றுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது விரிவாக தெரிந்துகொள்ளுங்கள். Shakti Cyclone: உருவானது சக்தி புயல்.. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முக்கிய அப்டேட்!
சக்தி புயல் தாக்கம் (Shakti Cyclone):
மத்திய மேற்கு, அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒரிசா கடலோரப் பகுதியில் கரையை கடந்துள்ளது. சௌராஷ்டிரா கடலோரப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி, ஒன்றாம் தேதி வாக்கில் வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இரண்டாம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் இது நகர்ந்து 3 ஆம் தேதி காலை 'சக்தி' புயலாக மாறி குஜராத்தின் துவாரகாவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து 5ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறக்கூடும். இதன் காரணமாக 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குழந்தைகள் உயிரிழப்புக்கு இருமல் மருந்து காரணமா? - மத்திய அரசு விளக்கம் :
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிந்த்வாராவில் 1 முதல் 7 வயது உட்பட்ட 12 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் செயல்படும் ஸ்ரீசென் பாா்மா பார்மா நிறுவனம் தயாரித்த கோல்ட் ரிப் (Coldrif) மருந்தும், மற்றொரு மாநிலத்தில் தயாரிக்கப்பட்ட நெக்ஸ்ட்ரோ டிஎஸ் (Nextro-DS) மருந்தும் சம்பவத்திற்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு விசாரணை நடந்து வந்து மாதிரிகளும் சேகரிக்கப்பட்டது. இதனிடையே தமிழகத்தில் கோல்ட் ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட இருமல் மருந்து மரணத்திற்கு காரணம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக் கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.
காசோலைகளுக்கு 1 மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டம் :
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் காசோலைகளை சமர்ப்பித்தவுடன் ஒரு மணி நேரத்துக்குள் அதற்கான பணம் வழங்கும் புதிய திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் காசோலைகளை வங்கி கிளைகளில் செலுத்தும் போது நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசோலைகளுக்கு 1 மணி நேரத்தில் பணம் வழங்கும் திட்டத்தின் மூலம் வங்கி பரிவர்த்தனைகளின் வேகம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரின் முன்ஜாமின் தள்ளுபடி :
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பிரச்சார நிகழ்ச்சியை தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தலைமையில் ஏற்பாடு செய்திருந்ததாகவும், மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான அளவில் எடுக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து சிறப்பு குழுவை அமைத்து கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினர். இதனிடையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுகுறித்து வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேலைக் கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் :
இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தின. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டங்கள் மாநிலத்தின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.