Uttarkashi Cloudburst (Photo Credit : @CNBCTV18News X)

ஆகஸ்ட் 05, உத்தரகாசி (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி, கிர் கங்காவில் இன்று மேக வெடிப்பு காரணமாக திடீரென பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் பெரு வெள்ளத்தின் நீர் சூழ்ந்து கொண்ட நிலையில், பல கட்டிடங்கள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. பொதுவாக உத்தரகாண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மழை என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. தென்மேற்கு பருவமழை உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு (Uttarakhand Rain) செல்லும்போது மேகத்தில் உள்ள மொத்த நீரையும் திடீரென விடுவித்து பெருமழை ஏற்படுகிறது.

மீட்பு படையினர் தீவிரம் :

இதனால் அங்கு ஆற்றங்கரையோரம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் அடித்துச் செல்லப்படுகின்றன. இதனிடையே தற்போது மீண்டும் கரையோர கட்டிடங்களை அடித்து செல்லும் வகையில் காட்டாற்று பெருவள்ளம் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்து கட்டிடங்கள் மீது அதிவேகமாக பாயும் பதறவைக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்தோ-திபெத்திய எல்லை படையினரின் 16 பேர் கொண்ட குழு, தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர். Uttarakhand Flood: மேக வெடிப்பு பெரு வெள்ளத்தில் சிக்கிய மக்கள்.. உயிர் பயத்தில் கதறும் காட்சிகள்.! 

50 பேர் மாயம் :

மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் நிலம் சரிந்து சகதிகளும் அடித்து வரப்பட்டு கிராமத்துக்குள் புகுந்துள்ளதால் பல வீடுகள் முற்றிலும் தரைமட்டமாகி உள்ளன. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் சகதி மணல் குவியலால் சூழப்பட்டுள்ளது. பலரும் வீடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுவதால் மீட்பு பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. தற்போது வரை இந்த நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்றும், 50 பேர் மாயமாகி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதில் முதற்கட்டமாக 4 பேரின் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிராமத்தினரின் நிலை என்ன?

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 4 பேர் உயிரிழந்த நிலையில், 50 பேர் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேக வெடிப்பால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒரு கிராமமே ஆற்று சகதிக்குள் சிக்கியுள்ளதால் கிராமத்தினரின் நிலைமை என்ன? என்ற கேள்வி சுற்று வட்டார கிராம மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் கேரள மாநிலம், வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 420 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது உத்தரகாண்டில் மேக வெடிப்பு காரணமாக ஒரு கிராமமே சகதிக்குள் சிக்கிய நிலை ஏற்பட்டு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

சகதிகளால் சூழப்பட்ட கிராமத்தின் வீடியோ :