Aadi Amavasai (Photo Credit: Wikipedia)

ஜூலை 23, சென்னை (Spritual News): அமாவாசைகளில் ஆடி அமாவாசை (Aadi Amavasai 2025) ஆன்மீக பக்தர்களால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களை வணங்கி தர்ப்பணம் கொடுப்பது பித்ரு தோஷத்திலிருந்து விடுவிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை ஆகும். தர்ப்பணம், திதி கொடுக்க தவறியவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது முன்னோர்களின் அருளை கொடுக்கும் என்பது ஐதீகம்.

ஆடி அமாவாசை விரதம் :

ஆடி அமாவாசை (Aadi Amavasai) நாளன்று வீட்டில் விரதம் இருப்பவர்கள் பகலில் வாழை இலை போட்டு படையல் வைத்து வழிபாடு செய்யலாம். சூரிய உதயத்திற்கு முன்பும், சூரிய உதயத்திற்கு பின்பும் விரதம் செய்வதை விட அமாவாசை நாட்களில் நண்பகல் 1:00 மணிக்குள் படையல் விரதத்தை முடிப்பது நல்லது. இந்த நாளில் அன்னதானம் வழங்குவது, வீடு தேடி வருவோரை உபசரிப்புகளுடன் கவனிப்பது குடும்பத்திற்கு நல்லது. Aadi Velli 2025: ஆடி முதல் வெள்ளிக்கிழமை.. அம்பிகையின் அருளை பெறுவது எப்படி..?

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரம் :

அதுபோல முன்னோர்களின் சாபம் குல வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால் பலரும் இந்த நாளில் தவறாமல் தர்ப்பணம் கொடுப்பார்கள். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஆடி அமாவாசை இன்று ஜூலை மாதம் 23ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில் 2:28 மணிக்கு தொடங்குகிறது. நாளை ஜூலை 24ஆம் தேதி இரவு 12:40 மணியளவில் நேரம் முடிகிறது. ஜூலை 24ஆம் தேதி அதிகாலை திதி கொடுக்க நினைப்பவர்கள் திதி கொடுக்கலாம்.

எப்போது திதி கொடுக்கலாம்?

ஜூலை 24ஆம் தேதி காலை 7:35 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12:00 மணிக்குள் தர்ப்பணம், திதி போன்றவை கொடுக்கலாம். அன்றைய நாளில் காலை 6:00 மணி முதல் 7:30 வரை எமகண்டமும், பகலில் 1:35 முதல் 3:00 மணி வரை ராகு காலமும் இருக்கிறது. ஆகையால் காலை 07:30 மணிக்கு மேல் நண்பகல் 12:00 மணிக்குள் திதி கொடுத்து முன்னோர்களை வணங்கலாம்.