ஆகஸ்ட் 01, சென்னை (Festival News): ஆடிப்பெருக்கு அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி மாதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு, ஆடி மாதத்தின் 18-ஆம் நாளில் கொண்டாடப்படுகிறது. இதை ஆடி பதினெட்டாம் பெருக்கு (Aadi 18) என்றும் சொல்வர். நீர் நிலைகளுக்கு நன்றி தெரிவித்து, பூஜை செய்து வழிபடும் நாளாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பெருக்கு (Aadi Perukku) அன்று புதிய தொழில் துவங்குவது, தொழில் விருத்திக்கான முதலீடுகள் செய்வது ஆகியவற்றை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்நாளில், டெல்டா மாவட்டங்களில் மாரியம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவதும், கருவாடு, முட்டைக்குழம்பு உட்பட அசைவ உணவுகளை (Aadi Perukku Special Recipes) படைத்து வழிபடுவதும் கிராமப்புறங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மாரியம்மனுக்கு பிடித்த கருவாடு குழம்பு, முட்டை குழம்பு எப்படி செய்வது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Aadi Velli 2025: அம்மன் அருளை பெற குத்துவிளக்கு பூஜை.. ஆடி 3வது வெள்ளியில் இதை செய்ய மறந்துடாதீங்க..!
கருவாடு குழம்பு:
தேவையான பொருட்கள்:
கருவாடு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2 (நறுக்கியது)
மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
புளி - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கருவாடு குழம்பு செய்முறை:
- முதலில் கருவாட்டை சுத்தம் செய்து, சூடான நீரில் கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். பின்னர், புளியை ஊறவைத்து, கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- மேலும், நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். புளி கரைசல் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.
- இறுதியில், கருவாடு சேர்த்து மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடம் வேக வைத்து, கருவாடு வெந்ததும், கொத்தமல்லி தழை தூவி இறக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான கருவாடு குழம்பு ரெடி. ஆடிப்பெருக்கு 2025 ஸ்பெஷல்.. வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு.!
முட்டை குழம்பு:
தேவையான பொருட்கள்:
முட்டை - 4
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
முட்டை குழம்பு செய்முறை:
- முதலில் முட்டையை வேகவைத்து, தோலுரித்து வைக்கவும். பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதக்கியவற்றை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- பின்னர், அரைத்த மசாலாவை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கிய மசாலாவில் வேகவைத்த முட்டையை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, குழம்பு பதத்திற்கு கிளறிவிடவும்.
- குழம்பு நன்கு கொதித்ததும் அதில் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான முட்டை குழம்பு தயார்.