ஜூலை 31, சென்னை (Festival News): ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆன்மிகச் சிறப்புமிக்க மாதங்களில் ஒன்றாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வழிபாடுகளுக்கும் விரதங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஆடி மாதத்தின் 3வது வெள்ளிக்கு (Aadi 3rd Velli) ஒரு தனிச் சிறப்பு உண்டு. இந்நாள் அம்பிகையின் அருளைப் பெற மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையில், குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனின் அருளைப் பெறுவது சிறந்தது. Aadi Perukku 2025 Wishes: ஆடிப்பெருக்கு திருவிழா 2025.. வாழ்த்து செய்திகள் இதோ..!
ஆடி 3வது வெள்ளி:
ஆடி வெள்ளிக் கிழமைகள், பொதுவாக அம்மன் கோவில்களில் சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள், திருவிளக்கு பூஜைகள் மற்றும் குத்துவிளக்கு பூஜைகளுடன் களைகட்டும். குறிப்பாக, மூன்றாவது வெள்ளி பல கோவில்களில் விசேஷமான உற்சவங்கள் மற்றும் ஊர்வலங்களுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், வீடுகளில் அம்மனை அலங்கரித்து, பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஆடி மூன்றாவது வெள்ளி என்பது அம்மனின் அருளை முழுமையாகப் பெற்று, நம் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள ஒரு பொன்னான நாளாகும். இந்த 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01ஆம் தேதி அன்று, ஆடி 3வது வெள்ளி வருகிறது. நம்பிக்கையுடனும், பயபக்தியுடனும் இந்நாளில் அம்மனை வழிபட்டால் நாம் கேட்ட வரங்கள் யாவும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று குத்துவிளக்கு பூஜை செய்வது சிறந்தது.
குத்துவிளக்கு பூஜை:
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக மூன்றாவது வெள்ளிக்கிழமை, வீட்டில் அம்பிகையை வழிபடுவது மிகவும் சிறப்பு. பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றிவைத்து, அம்பிகையை மனதார வழிபடுவது நல்லது. பால் பாயசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை அம்பிகைக்கு படைக்கலாம். மேலும், அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று வழிபட்டு, அம்மனின் அருளை பெறலாம். அம்பிகையை அலங்கரித்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும். ஆடிப்பெருக்கு 2025 ஸ்பெஷல்.. வார இறுதியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. அசத்தல் அறிவிப்பு.!
அம்மனின் அருளை பெற செய்யவேண்டிய பூஜை முறைகள்:
ஆடி 3வது வெள்ளியன்று, அதிகாலையில் எழுந்து நீராடி, தூய்மையான ஆடை உடுத்தி அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபடவும். இயலாதவர்கள், வீட்டிலேயே அம்மன் படத்தை அலங்கரித்து வழிபடலாம். முக்கியமாக, இந்நாளில் குத்துவிளக்கு பூஜை செய்வது மிகவும் விசேஷம். ஐந்து முக குத்துவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அலங்கரித்து, எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், அம்மன் பாடல்களைப் பாடி, நாமங்களைச் சொல்லி பக்தியுடன் வழிபடலாம். பொங்கல், கூழ், பால் பாயாசம், சுண்டல் போன்றவற்றை படையல் வைத்தும் வழிபடலாம். பூஜை முடிந்ததும், இந்த பிரசாதங்களை அக்கம் பக்கத்தினருக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பது நல்லது.
பூஜையின் பலன்கள்:
ஆடி மூன்றாவது வெள்ளியன்று அம்மனை மனமுருகி வழிபடுவதால், பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நோய் பிடியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். செல்வ வளம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். இந்நாளில் செய்யப்படும் தான தருமங்களும், அன்னதானமும் நமக்கு சிறப்பான பலன்களை அள்ளித்தரும் என்பது நம்பிக்கை.