TN Govt Bus (Photo Credit : Youtube)

ஜூலை 31, கிளாம்பாக்கம் (Chennai News): ஆடிப்பெருக்கு மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படுவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். ஆடி மாதத்தின் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு என பல விசேஷமான நாட்களை ஆடி மாதம் கொண்டுள்ளது. ஆடி மாதத்தின் மிக முக்கிய விசேஷங்களுள் ஒன்றாக ஆடிப்பெருக்கு (Aadi Perukku 2025) இருக்கிறது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், மங்களகரமான நாளாகவும் ஆடி 18 உள்ளது. தமிழ் மாதமான ஆடியின் 18 வது நாளில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு 2025ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 03ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்து (Aadi Perukku Special Bus) :

இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியுடனும், பாதுகாப்புடனும் பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் தமிழக அரசு சார்பில் இயக்கப்பட இருக்கின்றன. ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்து குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ஆகஸ்ட் 1 (வெள்ளி) ஆகஸ்ட் 2 (சனி) மற்றும் ஆகஸ்ட் 3 (ஆடிப்பெருக்கு - ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்தில் (Kilambakkam) இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. Aadi Perukku 2025: ஆடி 18 நன்னாளில் தாலி கயிறு மாற்ற நல்ல நேரம், மாற்றும் முறை இதோ.!

சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் :

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமையன்று 340 பேருந்துகளும், ஆகஸ்ட் 2 சனிக்கிழமையன்று 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர்,பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமையன்று 55 பேருந்துகளும், ஆகஸ்ட் 2 சனிக்கிழமையன்று 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு சிறப்பு பேருந்து முன்பதிவு :

வார இருந்து நாட்களை முன்னிட்டு மாதாவரத்திலிருந்து ஆகஸ்ட் 1 அன்று 20 பேருந்துகளும், ஆகஸ்ட் 2 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,224 பயணிகளும், சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.