ஆகஸ்ட் 02, சென்னை (Chennai News): ஆடி மாதத்தின் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, ஆடி அமாவாசையைத் தொடர்ந்து ஆடிப்பெருக்கு கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். ஆடி மாதத்தின் மிக முக்கிய விசேஷங்களுள் ஒன்றாக ஆடிப்பெருக்கு (Aadi Perukku 2025) கவனிக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்றாகவும், மங்களகரமான நாளாகவும் ஆடி 18 உள்ளது. தமிழ் மாதமான ஆடியின் 18வது நாளில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு 2025ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 03ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.
ஆடிப்பெருக்கு & ஆடி 18 வரலாறு தொடர்புகள் (Aadi Perukku & Aadi 18 Festival):
ஆடி 18 என்ற விஷயத்தில் பல அம்சங்கள் இருக்கின்றன. அதாவது, 18ல் பதினெண்கீழ்க்கணக்கு, பதினெண்மேல்கணக்கு நூல்களின் எண்ணிக்கை 18, மகாபாரத போர் நடைபெற்றது 18 நாட்கள், பாரதத்தின் அத்தியாயம் 18, கீதையின் அத்தியாயம் 18, சபரிமலை படிகள் 18, கருப்பசாமி கோவில் படிக்கட்டு சிறப்பு 18, சித்தர்கள் 18, இதிகாச புராணங்கள் 18 ஆகும். 18 என்ற எண்ணுக்கும், தமிழகத்தின் பாரம்பரியத்துக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. அதேபோல, ஆடிப்பெருக்கு தினத்தில் பாரதப்போர் நடந்து முடிந்ததாகவும் கூறப்படுகிறது. Aadi Perukku 2025: ஆடிப்பெருக்கு ஸ்பெஷல்; மாரியம்மனுக்கு பிடித்த கருவாடு குழம்பு, முட்டை குழம்பு செய்வது எப்படி?
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்:
ஆடிப்பெருக்கு நாளில் நீர்நிலை பெருகி விவசாயம் செழிக்கும் நீர்நிலைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, விவசாயம் அதிகம் நடக்கும் டெல்டா மாவட்டத்தில் காவேரி நதிநீர் கரைபுரண்டு ஓடும். காவேரி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கு வழிபாடு நடக்கும். இதேபோல, தமிழ்நாட்டில் அனைத்து ஊர்களிலும் உள்ள நீர்நிலைகளில் வழிபாடுகள் நடைபெறும்.
ஆடிப்பெருக்கு நன்னாளில் திருமணம் முடிந்த பெண்கள் தங்களின் மாங்கல்ய பலம் அதிகரிப்பதற்காக விரதம் இருந்து தாலி மஞ்சள் கயிறை புதிதாக மாற்றிக்கொள்ளலாம். திருமணம் முடியாத பெண்கள் ஆடிப்பெருக்கு நாளில் விரதம் இருப்பது திருமணத்தை கைகூட வைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். ஆடிப்பெருக்கு அன்று வரலட்சுமி, மகாலட்சுமிக்கு விரதம் இருந்து வழிபடுவது கூடுதல் நன்மையை தரும்.