Cissus Quadrangularis Pirandai (Photo Credit: @indupriya911 X)

ஜனவரி 24, சென்னை (Health Tips): காட்டுப்பகுதிகளில் வேலிகள், மரங்களில் இயற்கையாக படர்ந்து வளரும் தன்மை கொண்ட கொடி வகை தாவரமான பிரண்டை (PIrandai), தண்ணீர் இல்லாத சூழலிலும், வெயிலை தாங்கி வளரும் தன்மை கொண்டது ஆகும். மழைக்காலத்தில் துளிர்க்கத் தொடங்கும் பிரண்டையை (Cissus Quadrangularis), கிடைக்கும் நேரங்களில் சமைத்து சாப்பிடுவது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். தமிழர்களிடம் தொன்றுதொட்டு பிரண்டை மருத்துவ பயன்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டு வரும் நிலையில், அன்றைய காலங்களில் பொங்கல் பண்டிகையின்போது வீட்டின் முன்புறத்தில் வைக்கப்படும் பூலாப்பூ, வேப்பிலை, மா, இஞ்சி, மஞ்சள் கொத்து தோரணத்துடன் பிரண்டையும் இடம்பிடித்து இருக்கும் என்று முதியவர்கள் சொல்வார்கள். ஆனால், இன்று பிரண்டை அருகி மருவி வருவதால், அதனை பலரும் எட்டிகூட பார்ப்பது இல்லை. சிலர் அதன் சுவையால் நாக்கு அரிப்பு உண்டாகும் என தவிர்க்கின்றனர். பிரண்டையை முற்றிப்போன பிரண்டை அப்படியான சுவையுடன் இருக்கும். ஆனால், இளம் தளிராக கொடிகளில் இருக்கும் பிரண்டை அவ்வாறான விஷயத்தை பெரும்பாலும் கொண்டிருக்காது. Garlic Paneer Recipe: சுவையான பூண்டு பனீர் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

எலும்பு சார்ந்த பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு:

மனிதனின் எலும்பு மண்டலத்தை இரும்பு போல வலுப்படுத்தும் தன்மை கொண்ட பிரண்டையை வஜ்ரவல்லி, சஞ்சீவினி என பல பெயர்களை கொண்டும் அழைப்பார்கள். முந்தைய காலங்களில் இருந்து பிரண்டை தமிழர்களின் வாழ்வியலில் பண்பட்ட ஒன்றாக இருக்கும் நிலையில், அதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பிரஸ், நார்சத்து, பிளவனாயிடு, டேனின், கரோட்டின் என எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதில் முக்கிய பங்கு கொண்ட பிரண்டை, மிகப்பெரிய மருத்துவ வல்லமை கொண்டதும் ஆகும். எலும்பு முறிவு, எலும்பு தேய்மானம், எலும்புரை போன்றவற்றை சரி செய்யும் தன்மை பிரண்டைக்கு உண்டு.

உடற்பருமன், மலச்சிக்கல் தீர்க்கப்படும்:

வயிற்றில் இருக்கும் பாக்டீரியா, தேவையில்லாத நோய்க்கிருமி தொற்றுகள், அதனால் உண்டாகும் குடற்புண், வாய்புண், அமிலத்தன்மை ஆகியவற்றை கட்டுப்படுத்தி, குடல் பாதிப்புகளை விரைந்து குணப்படுத்தும். எலும்புகளின் வளர்ச்சி, பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு, செரிமானத்தை மேம்படுத்துதல், வயிற்று உப்பிசம் கட்டுப்படுத்துதல், கழுத்து வலி, வாந்தி, பேதி, வாய் மற்றும் வயிற்றுப்புண்களை சரி செய்தல், உடற்பருமனை கட்டுப்படுத்துதல், மலச்சிக்கலை நீக்குதல் என பிரண்டை உடலுக்குள் செய்யும் நன்மைகள் ஏராளம்.

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு:

பிரண்டையை அவ்வப்போது உணவில் துவையல், குழம்பு வடிவில் சேர்த்துக்கொண்டால் அடிபட்ட வீக்கம், சுளுக்கு, வாயுப்பிடிப்பு, தீரா வலிகள் சரியாகும். உடல் சுறுசுறுப்பு அடைந்து, ஞாபக சக்தி மேலோங்கும். மூளை நரம்புகளை பலப்படுத்தி, எலும்புகளுக்கு சக்தி கிடைக்கும். ஈறுகளில் ரத்தக்கசிவு பிரச்சனை இருந்தாலும் சரியாகும். வாயு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்து, அஜீரண பிரச்சனைகளை சரி செய்யும். இரத்தக்குழாய்களில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றி இரத்த ஓட்டத்தினை சீர்படுத்தும். மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி, முதுகுவலிக்கு பிரண்டை நல்ல தீர்வை வழங்கும். ஒழுங்கற்ற மாதவிடாய்க்கும் விடைதரும்.