Medicine Verification Update (Photo Credit : Pixabay / @business_today X)

அக்டோபர் 12, சென்னை(Health Tips): மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் 1 முதல் 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சி நிகழ்ந்துள்ளது. குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுநீரகத் திசுவில் டை எத்திலின் கிளைசால் எனும் ரசாயனம் இருந்தது உறுதி செய்யப்படவே, இருமல் மருந்துகளை குழந்தைகள் உட்கொண்டதன் மூலம் குழந்தைகள் உயிரிழந்தனவா?, இருமல் மருந்துகளில் இந்த ரசாயனம் கலந்து இருக்க வாய்ப்புள்ளதா? எனும் கோணத்தில் விசாரணை நடந்து வந்தது. Rat Fever: நெல்லையில் எலிக்காய்ச்சல் பரவல்.. தனியார் கல்லூரி மாணவர்கள் பாதிப்பு.. அறிகுறியும், தடுப்பு முறைகளும்.!

அவதிப்படும் மக்கள்:

பெயிண்ட் மற்றும் மை ஆகியவை தயாரிக்க டை எத்திலின் ரசாயனம் பயன்படுத்தப்படும் நிலையில், அந்த ரசாயனத்தால் பாதிப்பா? எனவும் சந்தேகிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு தொடர்புடையதாக இருமல் மருந்து கருதப்படும் நிலையில், இருமல் மருந்துகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் இருமல் மருந்து சாப்பிட்ட குழந்தைகளின் அடுத்தடுத்த உயிரிழப்பால் போலி மருந்துகள் தொடர்பான அச்சமும் மக்களிடையே எழுந்துள்ளது. மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் உண்மையானது எது? போலியானது எது? என்பது தொடர்பான அடையாளம் தெரியாமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

போலியான மருந்தை கண்டுபிடிப்பது எப்படி?

இந்த பிரச்சனையை தொடர்ந்து மத்திய அரசு அனைத்து மருந்துகளிலும் QR குறியீடு அச்சிட உத்தரவிட்டுள்ளது. அதன்படி QR கோடு அல்லது பார் கோடு ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். பிரபலமான நிறுவனத்தின் மருந்து, அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தொடர்பான விபரங்களை அந்த QR கோடில் பதிவு செய்திருக்கும். வாங்கும் நேரத்தில் அதனை ஸ்கேன் செய்தால் அனைத்தும் தெரிந்துவிடும். அதேபோல ஸ்கேன் செய்யும் போது அந்த தகவலில் சந்தேகம் இருந்தால் அந்த மருந்தை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிப்பது நல்லது.

பெற்றோர்களே கவனம்:

மேலும் சுகாதாரத்துறை சார்பில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்கு சென்று சோதிக்க வேண்டும் என்றும், சுயமாக மருந்து வாங்கி எந்த வித அலட்சியமான முயற்சியும் எடுக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.