அக்டோபர் 11, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோபாலசமுத்திரம் மேலத்திடியூர் பகுதியில் பி.எஸ்.என் பொறியியல் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். இதனிடையே கல்லூரி வளாகத்தில் உவரியைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவர் நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மாணவருக்கு விலங்குகளின் சிறுநீரில் இருந்து பரவும் லெப்டோஸ்பைரோசிஸ் வகை எலி காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நாளைய வானிலை: தமிழகத்தில் அடித்துநொறுக்கப்போகும் கனமழை.. 7 நாட்களுக்கு மிரட்டும் வானிலை.!
எலிக்காய்ச்சல் பாதிப்பு (Rat Fever):
இதனை அடுத்து நெல்லை மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 7 மாணவர்கள் (Tirunelveli college Rat Fever) எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் இருந்ததால் அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கும் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில், உடனடியாக கல்லூரிக்கு விடுமுறை அளித்து நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டது. கல்லூரியில் ஆய்வு நடத்திய நிலையில் சுத்திகரிப்பு செய்யப்படாத குடிநீர், சுகாதாரமற்ற வளாகம், சுத்தமில்லாத கழிப்பறைகள், உணவு பாதுகாப்பு கூடத்தில் உரிய முறையில் செய்யப்படாத செயல்முறைகள் போன்றவற்றை கண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஓடை நீரை சமைக்க பயன்படுத்திய உணவுக்கூடம்:
இதனால் மேற்கூறிய தவறுகளை திருத்த உத்தரவிட்ட சுகாதாரத் துறையினர், கல்லூரியில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் சமையல் மாதிரிகள், காய்கறிகள் போன்றவையும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உணவு கூடத்தின் சான்றிதழும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூரியின் பின்புறம் இருக்கும் வெள்ளநீர் ஓடையில் இருந்து சமைக்க நீர் எடுத்து பயன்படுத்தியதால் எலிக்காய்ச்சல் பரவி இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. குளோரோசின் செய்யப்படாத தண்ணீரை உபயோகப்படுத்தாமல் குடிநீரை வாங்கி உபயோகப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Dengue Fever: டெங்கு & இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல்.. அறிகுறிகளும், தடுப்பு நடவடிக்கைகளும்.. மழைக்கால எச்சரிக்கை.!
எலிக்காய்ச்சல் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் (Rat Fever Symptoms & Prevention):
மேலும் இதுதொடர்பாக பேசிய மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன், "எலிக்காய்ச்சல் என்பது லெப்டோஸ்பைரோசிஸ் என்ற பாக்டீரியா தொற்றால் ஏற்படும். எலிகள் மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் கலந்து மாசடைந்த நீர் அல்லது சுற்றுப்புறத்தின் வழியாக இந்த நோய் மனிதர்களுக்கு பரவும். இதனால் காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல் சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு போன்ற அறிகுறிகள் (Rat Fever Symptoms) தென்படும். இந்த நோய் பரவலைத் தடுக்க எலிகள் தங்கும் இடங்களை தொடர்ந்து சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம். மேலும் வீடுகள் மற்றும் நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருத்தல் நோய் பரவலைத் தடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. நோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுதல் அவசியம்" என தெரிவித்தார்.