Dengue Fever (Photo Credit : @MalaimurasuTv / @News18TamilNadu X)

அக்டோபர் 07, சென்னை (Health Tips): மழைக்காலத்தில் மக்களை பெரும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் நோய்களில் டெங்குவிற்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுக்களின் காரணமாக பரவும் டெங்கு, இரத்தத்தில் இருக்கும் தட்டணுக்களை அழிக்கும் தன்மை கொண்டவை ஆகும். இரத்தத்தின் தட்டணுக்கள் அழியும்போது பற்களின் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை ஆகியவற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உரிய சிகிச்சை இல்லாத பட்சத்தில் உயிரிழப்பும் ஏற்படலாம். பருவகால மாற்றத்தால் உருவாகும் சூழ்நிலை கொசுக்கள் பெருகுவதற்கும், அதன் மூலம் டெங்கு வேகமாகப் பரவுவதற்கும் சாதகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெங்குவின் முக்கிய அறிகுறிகள் (Dengue Fever Symptoms):

டெங்கு காய்ச்சலின் ஆரம்பத்தில் கடுமையான உடல் காய்ச்சல், வயிற்றுவலி, தலைவலி, மூட்டு வலி, கண் வலி, வாந்தி, கடும் சோர்வு போன்றவை தென்படும். குறிப்பாக டெங்கு தாக்கத்தின் போது உடல் மூட்டுகள் மற்றும் எலும்புகளில் கடுமையான வலி ஏற்படும். வாந்தி மற்றும் வயிற்றுவலி போன்றவை டெங்குவின் ஆபத்தான கட்டத்தை குறிக்கும் அறிகுறிகளாகும். சிலருக்கு 5 முதல் 7 நாட்களில் காய்ச்சல் சரியாகும். ஆனால் சிலருக்கு அறிகுறிகள் குறையாமல் நீடித்து உயிருக்கு ஆபத்தாக மாறும் அபாயம் உள்ளது. 7 நாட்களில் காய்ச்சல் குறையாத பட்சத்தில் சுவாசக் குறைபாடு, கை கால்கள் குளிர்வது போல உணர்வு, இரத்த அழுத்தம் குறைதல், மயக்கம் ஆகியவை ஏற்படும். இந்த சூழ்நிலையில் அவசர சிகிச்சை செய்யாவிடில் மரணமும் ஏற்படக்கூடும். Health Warning: புளித்த மாவில் தோசை சாப்பிடுறீங்களா? கவனமாக இருங்க மக்களே.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!

இரத்த தட்டணுக்கள் குறையும் அபாயம்:

டெங்கு பரவுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்கள் பகல் நேரத்தில் பெரும்பாலும் கடித்து வைரஸை பரப்புகின்றன. இந்த வைரஸ் மனித உடலில் நுழைந்தவுடன் இரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) அழிக்கும். தட்டணுக்கள் வேகமாக குறையும் பட்சத்தில் சரியான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும். அதுபோல கைக்குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உடனடி மற்றும் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது மிகவும் அவசியம் என சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

டெங்கு பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயரும் அபாயம்:

தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு பரவல் அதிகரித்து வருவதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் தவறாமல் சேர்க்க வேண்டும். ஏடிஸ் கொசுக்களால் தினசரி 60 முதல் 70 பேர் வரை டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 2025ஆம் ஆண்டில் இதுவரை 14,000க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் வாரங்களில் மழை தீவிரமாகும் வாய்ப்புள்ளதால் டெங்கு பரவல் 20,000 வரை தாண்டும் என சுகாதாரத்துறை கணித்துள்ளது.

இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் பரவல் (Influenza Fever Symptoms):

இந்த நிலையில் டெங்குவுடன் சேர்ந்து இன்ஃப்ளூயன்சா (Influenza) வகை காய்ச்சலும் பரவி வருகிறது. இவை இரண்டுக்கும் பொதுவான அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, சோர்வு போன்றவை இருக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் சாதாரண காய்ச்சல் என எண்ணாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. 24 மணி நேரத்திற்குள் காய்ச்சல் குறையாவிட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு & இன்ஃப்ளூயன்சா தடுப்பு நடவடிக்கைகள் (Dengue & Influenza Prevention):

  • டெங்குவை கட்டுப்படுத்த அரசு மட்டுமல்லாமல் பொதுமக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
  • தும்மும் போதும், இருமும் போதும் வாய் மற்றும் மூக்கை மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் குடும்பத்தில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இயலும்.
  • அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவுதல் அவசியம்.
  • காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் வேண்டும்.
  • காய்ச்சல் நேரத்தில் உணவுகளை தவிர்க்க கூடாது. திட உணவுகளை சாப்பிட முடியாத பட்சத்தில் பழ ஜூஸ்கள், கஞ்சி, ரசம் போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதுபோல சூடான நீர் குடிப்பது நல்லது.
  • வீட்டின் சுற்றுப்புறங்களில் தேவையற்ற பாத்திரங்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • வீட்டை சுற்றியுள்ள தேவையற்ற பொருட்களை அகற்றுவது நல்லது. இதன் மூலம் ஏடிஸ் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கலாம்.

குறிப்பு: பருவமழை காலங்களில் டெங்கு போன்ற வைரஸ் பரவல்கள் அதிகரிக்கும் என பயப்பட வேண்டாம். சுத்தம் மற்றும் உடனடி சிகிச்சை மூலமாக இதை கட்டுப்படுத்த முடியும். சுகாதாரத்துறையின் எச்சரிக்கையை பொதுமக்கள் அலட்சியமாக எடுத்துக்கொள்ள கூடாது. சிறிய அலட்சியம் கூட பெரிய அபாயத்தை உருவாக்கும் என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் அனைவரின் பொறுப்பு என்பதை நினைவில் கொள்வது அவசியம்.