அக்டோபர் 17, சென்னை (Festival News): இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பிக்கப்படும் தீபாவளி பண்டிகை (Diwali Festival) இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக திகழ்கிறது. ஒளி மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும் இப்பண்டிகை இருளை அகற்றி தீமையை வெல்வதை உணர்த்துகிறது. தீபாவளி பண்டிகையை தீபஒளி திருநாள் (Deepavali) என்றும் அழைப்பர். இந்து புராணங்களின் படி, கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. ராமாயணத்தின் படி, இராமர் ராவணனை வதம் செய்து தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து சீதையுடனும், லக்ஷ்மணனுடன் அயோத்திக்கு திரும்பிய நாளில் அயோத்தி மக்கள் ராமரை விளக்கேற்றி தீப ஒளியுடன் வரவேற்றனர்.
தீபாவளியின் முக்கியத்துவம்:
தீபாவளி என்பது தீபம் + ஆவளி என்பதை குறிக்கிறது. அதாவது தீபம் என்றால் ஒளி, ஆவளி என்றால் வரிசை 'தீபங்களின் வரிசை' என பொருள் தருகிறது. தீமை எனும் இருளை நீக்கி, நன்மை எனும் ஒளியை ஏற்ற வேண்டும் என்பதே தீபாவளியின் உண்மையான பொருளாக கருதப்படுகிறது. தீபாவளி நாளில் ஏழை, பணக்காரர் என வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து, வீட்டை அலங்கரித்து, தீபமேற்றி, இனிப்புகள் பகிர்ந்து, பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கமாகும். இந்நன்னாளில் எண்ணெய் தேய்த்து நீராடி தங்கள் மனதில் இருக்கும் இருளை நீக்க வேண்டும். Deepawali Purchasing with GST Effect: துணி எடுக்க போனாலும் ஜிஎஸ்டி மறந்துடாதீங்க.. கவனம் மக்களே.. பாதிக்கப்பட்டவர் அறிவுறுத்தல்.!
2025 தீபாவளி எப்போது?
2025 ஆம் ஆண்டின் தீபாவளி (Diwali 2025) அக்டோபர் 20-ஆம் தேதி திங்கட்கிழமையன்று வருகிறது. தமிழ் மாதத்தை பொறுத்தவரையில் ஐப்பசி 03-ஆம் தேதி வருகிறது. இந்த ஆண்டு தீபாவளியில் மாலை அமாவாசையும் (Diwali Amavasya) வருவதால் லட்சுமி - குபேர பூஜைக்கும் உகந்ததாக கருதப்படுகிறது. அக்டோபர் 20-ஆம் தேதி மாலை 03:45 மணிக்கு அமாவாசை தொடங்கி, அடுத்த நாள் அக்டோபர் 21-ஆம் தேதி மாலை 05:48 வரை நீடிக்கிறது. சூரியன் மறையும் மாலை நேரத்தில் லட்சுமி - குபேர பூஜை செய்வது வாழ்க்கையில் செல்வம், வளம் பெருக வழிவகை செய்யும்.
தீபாவளி நல்ல நேரம் - லட்சுமி குபேர பூஜை செய்ய சிறந்த நேரம்:
தீபாவளி நன்னாளில் பூஜை (Deepavali Pooja Time) செய்ய விரும்புவோர் காலை 09:01 மணிக்கு தொடங்கி 10:20க்குள் பூஜை செய்யலாம். நண்பகல் 1:30 முதல் 03:00 மணி வரை நல்ல நேரமாக கருதப்படுகிறது. அக்டோபர் 20-ஆம் தேதி மாலை 03:45 முதல் இரவு 07:00 மணி வரை லஷ்மி - குபேர பூஜை செய்ய சிறந்த நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி வழிபாடு முறை(Diwali Poojai):
- தீபாவளி நன்னாளில் வீட்டை சுத்தம் செய்து பூக்களால் அலங்கரித்து தீபங்கள் ஏற்ற வேண்டும்.
- இந்நாளில் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து குளித்தல் அவசியம்.
- குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் பரிமாறி மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடலாம்.
- பூஜை செய்யும் நேரத்தில் எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் அமைதியாக இருப்பது நல்லது.
- லஷ்மி, விநாயகர், குபேர வழிபாடு செய்வது செல்வத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கும்.
- பூஜைக்கு பின் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தல் நல்லது.
- 2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி அன்று அமாவாசையும் சேர்ந்து வருவதால் லஷ்மி - குபேர பூஜை செய்பவர்கள் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது.
பாதுகாப்பான தீபாவளியை குடும்பத்துடன் சிறப்பிக்க லேட்டஸ்லியின் நெஞ்சம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள்!