Girl Sad | Mensural / Periods File Pic (Photo Credit: Pixabay)

ஜூலை 08, சென்னை (Health Tips Tamil): பெண் குழந்தைகள் சராசரியாக 10 வயது முதல் 14 வயதுக்குள் பருவமடைகின்றனர். பருவமடையும் போது ஆண், பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படும் மாற்றம் பொதுவானவை. இந்த மாற்றத்தை வைத்தும் நாம் அதனை முன்கூட்டியே கண்டறியலாம். இதன் வாயிலாக அவர்களுக்கு தேவையான அறிவுரை வழங்கவும், பருவமடையும் விஷயத்துக்கு அவர்களை தயார்படுத்தவும் முடியும்.

வெள்ளைப்படுதல் :

பெண் குழந்தைகள் பருவமடையும் முன்பு வெள்ளைப்படுதல் ஏற்படும். இது ஹார்மோன் மாற்றத்திற்கு உடல் தயாராகி வரும் அறிகுறி ஆகும். முதன் முதலில் வெள்ளைப்படுதல் ஏற்படுவதால் உடல்நல பாதிப்பா? என அவர்கள் குழப்பமடைவர். இந்த சமயத்தில் சுகாதார நடவடிக்கைகளை பெற்றோர்கள் கட்டாயம் பெண் குழந்தைகளுக்கு விளக்குதல் அவசியம்.

மார்பக வளர்ச்சி :

பருவமடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு மார்பக வளர்ச்சி ஏற்படும். 12 வயதில் ஒருவேளை பெண் குழந்தை பருவமடைந்தால், பத்து வயதிலேயே அவர்களுக்கு மார்பக வளர்ச்சி ஏற்படும். இதுவும் ஹார்மோன் மாற்றத்தை குறிக்கிறது. இதன்மூலம் அவர்கள் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேரிடும்.

முடி வளர்ச்சி:

பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படும் முடி வளர்ச்சியும் பருவமடைதலின் அறிகுறியை உணர்த்துகிறது. அதேபோல பருவமடையும் முன்பு அல்லது பருவமடைந்த பின்பு பெண்களின் உயரம் திடீரென அதிகரிக்கலாம். இதனை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

குழந்தைகளின் மனநிலை மாற்றம் :

குழந்தைகள் மனநிலை மாற்றத்தை அடிக்கடி எதிர்கொள்வார்கள். உணர்ச்சிகள் வலுவாக இருக்கும். குழப்பம், பயம், கோபம், திடீர் மகிழ்ச்சி, வருத்தம் போன்றவையும் ஹார்மோன் மாற்றமாக தொடரும். பருவமடையும் போது உடல் ஹார்மோன்களை ஏற்கும். இந்த சூழ்நிலைக்கு மூளை பழகிக்கொள்ளும் என்பதால் பின் நாட்களில் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியும். தொடக்கத்தில் அது குழப்ப நிலையிலேயே இருக்கும்.

பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளின் உடலில் ஏற்படும் இந்த மாற்றங்களை அறிந்துகொண்டு, அவர்களுக்கு பூப்படைதல் குறித்த விளக்கத்தை அளிப்பது அவசியம். அதுபோல குழந்தைகள் சொல்ல வருவதை அமைதியாக கேட்டறிவது அவசியம். அவர்களுடன் நேரத்தை செலவழித்து அவர்கள் கூறுவதை கேட்பதால் அவர்களும் தயக்கமின்றி உடலில் ஏற்படும் மாற்றங்களை பகிர்வார்கள். முதல் மாதவிடாய் என்பதும் உடலில் ஏற்படும் மாற்றங்களில் ஒன்றுதான் என்பதை அவர்களுக்கு கூறி புரியவைத்தல் அவசியம்.