Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரியன்று செய்யப்படும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள்.!

மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வெவ்வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்யப்படும்.

Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; மகாசிவராத்திரியன்று செய்யப்படும் சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள்.!
Maha Shivaratri 2025 Wishes 3 (Photo Credit: Team LatestLY)

பிப்ரவரி 26, சென்னை (Festival News): சிவபெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாக மகா சிவராத்திரி (Maha Shivaratri) உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில், மகா சிவராத்திரி விழா சிறப்பிக்கப்படுகிறது. சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்துகொண்ட நாளையே மகா சிவராத்திரி தினமாக கொண்டாடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அன்று, மக்கள் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுகிறார்கள். இந்நாளில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். அன்றைய தினம், மாலை வேளையில் இருந்து இரவு முழுவதும் சிவபெருமானுக்கு (Lord Shiva)நான்கு கால பூஜைகள் நடத்தப்படும்.

நான்கு ஜாம பூஜைகள் :

முதல் கால பூஜை (6PM-9PM) :

முதல் கால பூஜை பிரம்மன், சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் உடலில் இருந்த பிரச்சனைகள் பூரணமாக குணமாகும். இந்தக்கால பூஜையில் சிவபெருமானுக்கு பஞ்சகவ்யத்தால் (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமியம், கோசாணம்) அபிஷேகம் செய்து, சந்தனம் பூசி, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்து, வில்வ இலை மற்றும் தாமரைப்பூவால் அலங்காரம் செய்து, பாசிப்பருப்பு பொங்கலை நிவேதனமாக படைத்து, ரிக்வேதம் மற்றும் சிவபுராணத்தை பாராயணம் செய்து நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும். Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி 2025; நாள், சிவ வழிபாடு மற்றும் வாழ்த்து செய்திகள் இதோ..!

இரண்டாவது கால பூஜை (9PM-12AM) :

இரண்டாவது கால பூஜை திருவடி தேடி சென்ற பரம்பொருள் விஷ்ணு அவர்களால் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும், செல்வம் பெருகும், திருமாலின் அருள் கிடைக்கும். இந்த காலத்தில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் பன்னீர் சேர்த்து அரைத்து பூசி, வெண்பட்டாடை அணிவித்து அலங்காரம் செய்தும், வில்வ இலை, துளசியால் அலங்காரம் மற்றும் அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசத்தை நிவேதனமாக படைத்து, யஜூர் வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் கீர்த்தி திருவகவலை பாராயணம் செய்தும் நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.

மூன்றாவது கால பூஜை (12AM-3AM) :

மூன்றாம் கால பூஜை என்பது அம்பாள் அவர்கள் சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் சிவபெருமானுக்கு விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை நெருங்காது. மேலும், இந்த காலத்தில் சிவபெருமானுக்கு தேனால் அபிஷேகம் செய்தும், பச்சைக்கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதிமல்லி பூவினை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், கற்கண்டு சாதத்தை நிவேதனமாக படைத்தும், சாமவேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் திருவண்டகப் பகுதியை பாராயணம் செய்தும் நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும்.

நான்காவது கால பூஜை (3AM-6AM) :

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் என அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பது நான்காவது கால பூஜையாகும். இந்த காலத்தில் சிவபெருமானுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்தும், பச்சை அல்லது நீல வண்ண வஸ்திரம் அணிவித்தும், நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்தும், சுத்தமான அன்னத்தை நிவேதனம் படைத்து, அதர்வண வேதம் மற்றும் எட்டாம் திருமுறையில் போற்றி திருவகவலை பாராயணம் செய்தும் தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும்.

(The above story first appeared on LatestLY on Feb 26, 2025 04:08 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).