Jallikattu Bulls (Photo Credit: Instagram)

ஜனவரி 15, சென்னை (Festival News): தமிழ்நாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மற்றும் வீரத்திற்கு பெயர்போனது. தமிழ்நாட்டில் முதன்மை தொழிலாக இருக்கும் விவசாயத்தில், நாட்டு மாடுகள் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றை கொண்டாடும் வகையிலே தான் ஜல்லிக்கட்டு போட்டி (Jallikattu) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கம்பீரமான தோற்றம், கூர்மையான கொம்புகள், மலைக்குன்று போன்ற திமில்களை கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு காளைகளைஅடக்கி வீரத்தை வெளிப்படுத்துவார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுக்காவே சிறப்பு கவனிப்புடன் வளர்க்கப்படும் நாட்டு மாட்டினங்கள் அவற்றின் பிறப்பிடம் , தன்மை மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

காங்கேயம் காளைகள் (Kangayam):

ஜல்லிக்கட்டு என்றாலே காங்கேயம் காளைகள் தான் என ஒரு தவிர்க்க முடியாத கருத்து உண்டு. இவை காங்கேயம், ஈரோடு , கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் தோன்றியவை . தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. இவை பிறக்கும் போது சிவப்பு நிறத்திலும் , வளர வளர சாம்பல் கலந்த கருப்பு நிறத்திலும், முன்பகுதி, திமில் மற்றும் பின்னங்கால் பகுதி அடர் நிறத்திலும் மாறும். காங்கேயம் இன காளைகளில் மயிலை, பிள்ளை, செவலை மற்றும் காரி என நான்கு உட்பிரிவுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காங்கேயம் காளைகள் சுமார் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை விற்கப்படுகிறது. Jallikattu Bulls: காங்கேயம் முதல் ஆலம்பாடி வரை.. தமிழர் வீரத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு காளைகள்.. இத்தனை வகைகள் உள்ளனவா? விபரம் உள்ளே.!

மலை மாடுகள் (Malai Maadu):

தேனி மற்றும் கம்பம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் மாட்டினம். இந்த மாடுகள் மலையில் மேய்ச்சலுக்கு போவதால் மலைமாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. கரும்போர், செம்போர் என நிறத்தில் உள்ளது தனிசிறப்பு. இவை ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்குச் சிறந்ததாக விளங்குகின்றன. புலி, சிறுத்தை, செந்நாய் , நரி போன்ற விலங்குகளை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவை. மலைகளில் வளர்வதால் காட்டு மாடுகளின் குணம் கொண்டு அதிக மூர்க்கதனமாக காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகம் வெற்றி பெறும் மாட்டினமாக தேனி மலைமாடுகள் இருக்கின்றன. இதன் மூன்று மாத கன்றுகளே 10 ஆயிரத்திற்கும் மேல் விலை போகிறது என்கிறார்கள்.

ஏன் நாட்டு மாடுகள் அவசியம்?

தமிழகத்தில் சுமார் 87 வகையான நாட்டு மாட்டினங்கள் இருந்தன. காலப்போக்கில் அவற்றில் பாதி காணாமல் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நாட்டு மாட்டினங்களை பாதுகாத்து வருகிறார்கள். இவற்றின் பாலில் A2 புரதச் சத்து அடங்கியுள்ளது. நாட்டு மாடுகள் பெரும்பாலும் இயற்கையாக மேய்ச்சலுக்கு செல்வதால் அவற்றின் சாணமும் கோமியமும் சத்து மிக்க உரமாக செயல்படுகிறது. நாட்டுமாட்டு இனங்களில் பல மாடுகள் அழிந்து வருவதால் தமிழக அரசு சார்பில் அந்தந்த வட்டாரப் பகுதிகளில் ஆராய்ச்சி நிலையமும், பண்ணைகளும் அமைக்கப்பட்டு மாட்டினங்களை மீட்டெடுத்து வருகின்றது.